`பரம்பரை சொத்தை அறநிலையத்துறை எடுத்துக்கிட்டாங்க' - தலைகீழாக நடந்து வந்துஆட்சியரிடம் மனு | man gave a petition to collector to get his own property

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (18/12/2018)

கடைசி தொடர்பு:12:25 (18/12/2018)

`பரம்பரை சொத்தை அறநிலையத்துறை எடுத்துக்கிட்டாங்க' - தலைகீழாக நடந்து வந்துஆட்சியரிடம் மனு

தனது பூர்வீக விவசாய நிலத்தை அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்குத் தலைகீழாக நடந்து வந்து மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சத்ரபதி

கோவை மாவட்டம், கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சத்ரபதி. குனியமுத்தூரில் உள்ள அருள்மிகு தருமராஜா திரௌபதி அம்மன் கோயில் பரம்பரை பூசாரியாக இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது நிலத்தை அறநிலையத்துறை தனக்குச் சொந்தம் என விளம்பரப் பலகை வைத்திருக்கிறது. அவர் அப்பலகையை அப்புறப்படுத்தும் போது அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ``நான் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தருமராஜா திரௌபதி அம்மன் கோயில் பரம்பரை பூசாரியாகப் பணியாற்றி வருகிறேன். 

இதற்காக மன்னர் காலத்தில் எங்களது முப்பாட்டன்கள், காலம் சென்ற பெரிய வீரப்ப செட்டி, சின்ன வீரப்ப செட்டி, நஞ்சப்ப செட்டி ஆகியோருக்கு கோயிலில் பூசைகள் செய்யும் உரிமை வழங்கப்பட்டது. கோயிலில் வருமானம் குறைய தொடங்கியதாலும் வருமானம் இல்லாததாலும்  குளத்துப் பாளையத்தில் உள்ள 5.41 ஏக்கர் நிலம் எங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் பெரியோர்களால் வழங்கப்பட்டது. இதில்தான் காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எங்களிடமிருந்து பூசை செய்யும் உரிமையை இந்து அறநிலையத்துறையினர் பறித்துக் கொண்டனர். அதேபோல் நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்த நிலத்திலும் இது இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளனர். 

மனு

இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது. எனது அம்மாவுக்கும் வயது ஆகிவிட்டதால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார். எனக்கும் இப்பொழுது வேலை இல்லை. என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு வயது 53 ஆகி விட்டதால் இனி யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். எனது பரம்பரை தொழில் ஆன கோயிலில் பூஜை செய்வதைத் திரும்ப எனக்கு அளிக்க வேண்டும். எங்களது பரம்பரை சொத்தான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அனுமதி கேட்கிறேன்" என்று கூறினார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தலைகீழாக நடந்து வந்ததால் சிறிது நேரம் பரபரப்பும், போலீஸாரால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.