``இறப்புக்குப் பிறகும் உயிர்வாழ்வோம்!" - உடல் உறுப்பு தானம் விழிப்பு உணர்வில் மமதி சாரி | "This is the reason why I did organ donation!"- Mamathi chari

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (18/12/2018)

கடைசி தொடர்பு:17:05 (18/12/2018)

``இறப்புக்குப் பிறகும் உயிர்வாழ்வோம்!" - உடல் உறுப்பு தானம் விழிப்பு உணர்வில் மமதி சாரி

மமதி சாரி

தொகுப்பாளர் மற்றும் நடிகை மமதி சாரி, சேவை நோக்கத்தில் விளம்பரங்களில் நடிக்கிறார். மேலும், சமீபத்தில் உடல் உறுப்புதானம் செய்தவர், பிறரையும் உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறார். இதுகுறித்து கேட்டபோது...

``பிரக்யா என்ற பெண்மணி, தன் தொண்டு நிறுவனத்தின் மூலம், தீக்காயம் மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல் சீரமைப்புக்கான பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல சிகிச்சைகளை இலவசமாகச் செய்துவருகிறார். தவிர, அதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக் கருத்தரங்கு மற்றும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். அவர், தன் நண்பரான மருத்துவர் சக்சேனாவுடன் இணைந்தும் இலவச சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறார்.

சமீபத்தில், குழந்தைகளின் நலனுக்கான விழிப்பு உணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்தேன். அந்த நிறுவனத்தின் மூலமாக, பிரத்யாவின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பிரத்யா மற்றும் மருத்துவர் சக்சேனா இருவரும், கடந்த வாரம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். அதில், பிளாஸ்டிக் சர்ஜரி முறையை எளிமையாகவும், குறைந்த செலவிலும் செய்வது தொடர்பாக, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பயிற்சியளித்தனர்" என்கிற மமதி சாரிக்கு, உடல் உறுப்புதானம் செய்யும் எண்ணம் நீண்ட நாள்களாக இருந்துள்ளது. ஆனால், அதற்குச் சரியான வழிமுறைகள் தெரியாமல் இருந்துள்ளார். 
 

மமதி சாரி

``இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில், மருத்துவமனை தலைவர் மருத்துவர் பொன்னம்பலம் நமச்சிவாயம், பிளாஸ்டிக் சர்ஜரி துறையைப் பற்றியும், அத்துறையால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளைப் பற்றிப் பேசினார். மேலும், உடல் உறுப்பு தானம் செய்ய எல்லோரும் முன்வர வேண்டும். கை தானம் செய்வதன் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. பிறகு பேசிய நான், `ஏதாவதொரு விஷயத்தை இழக்கும்வரையில் அதன் மதிப்பு நமக்குத் தெரியாது. அதனால் நம் உடல் நலன் மீது கவனத்துடன் செயல்பட வேண்டும். தீக்காயம் மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கக்கூடாது. நம்மால் முடிந்த பொருளுதவி அளிக்க வேண்டும். பணம் தர முடியாதவர்கள் அன்பாகப் பேசுவது உள்ளிட்ட ஏதாவதொரு வகையில் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு நம்பிக்கையளிப்போம்' என்று பேசினேன். முடிவில், தோல், கைகள், கால்கள் மற்றும் எலும்பு உட்பட  என் உடல் உறுப்புகள் முழுவதையும் தானம் செய்ய ஒப்புக்கொண்டு, அங்கேயே உடன்படிக்கையில் கையொப்பமிட்டேன். இறப்புக்குப் பிறகும், என் உடல் உறுப்புகள் பலர் உயிர்வாழ உதவும் என்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எல்லோரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வாருங்கள். இறப்புக்குப் பிறகும் உயிர்வாழ்வோம். தற்போது எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் உடல் உறுப்பு தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன்" என்கிறார் மமதி சாரி.