வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (18/12/2018)

கடைசி தொடர்பு:13:10 (18/12/2018)

`விலை அதிகம் கிடைத்தும் விளைச்சல் இல்லை!' - வேதனையில் மல்லிகை விவசாயிகள்

``விலை அதிகம் கிடைத்தும் மகசூல் இல்லையே'' என்ற வேதனையில் மல்லிகை விவசாயிகள் இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் மலர் விவசாயம்தான் பிரதானம். மல்லிகை, ரோஸ், காக்கரட்டான், முல்லை, ஜாதிமல்லி, அரளி, செவ்வந்தி, மருக்கொழுந்து என அனைத்து விதமான பூக்களும் இந்தப் பகுதியில் விளையும். இங்கிருந்து வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதியாகின்றன. குறிப்பாக மதுரை மல்லி என்ற பெயரில் சந்தையில் விற்பனையாகும் மல்லிகை, நிலக்கோட்டை பகுதியில் விளைவதுதான். வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு காரணமாகப் பூக்கள் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்தைவிட, கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பூ அரும்பு எடுத்தவுடனே கருகி உதிர்ந்து விடுகிறது. இதனால் மல்லிகை விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கருகிய மல்லிகை

வெயில் காலத்தில் இலைகள் கருகிப்போகும். ஆனால், பாசனம் செய்ய செய்ய இலைகள் துளிர்த்து, அரும்புகள் தோன்றும். ஆனால், தற்போது கடும் பனியும், குறைந்த பட்ச வெப்பமும் நிலவி வருகிறது. இந்த சூழல் மல்லிகை சாகுபடிக்கு ஏற்றதல்ல. இதனால் அரும்புகள் உருவானவுடனே கருகி, உதிர்ந்து விடுகின்றன. இதனால் வழக்கமான மகசூலில் ஒரு சதவிகிதம்கூட தற்போது மகசூல் கிடைப்பதில்லை.
வழக்கமாக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு தினமும் 25 டன் மல்லிகை வரத்து இருக்கும். ஆனால், பனிப் பொழிவு காரணமாக, ஒரு டன்னுக்கும் குறைவாகவே வரத்து இருக்கிறது. இதனால் நேற்று ஒரு கிலோ மல்லிகை ஆயிரத்து நானூறு ரூபாய்க்கு விற்பனையானது.

 அரும்புகள் உருவானவுடனே கருகிய மல்லிகை

விலை அதிகம் கிடைக்கும் நேரத்தில் விளைச்சல் இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள். பனிப்பொழிவில் இருந்து செடிகளைக் காப்பாற்றுவதற்காக, பசுமை குடிலுக்குள் சில விவசாயிகள் மல்லிகை சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால், பசுமை குடிலுக்குள் வளர்க்கும்போது, இலைகள் தான் அதிகம் உற்பத்தியாகிறது. பூக்கள் அதிகம் உருவாவதில்லை எனப் புலம்புகிறார்கள் விவசாயிகள்.

மல்லிகை பூ பறிக்கும் விவசாயி 

இதே நிலை நீடித்தால் மல்லிகையின் விலை கடந்த ஆண்டைப் போல கிலோ ஆறாயிரம் ரூபாயையும் தாண்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.  விலை கிடைக்கும்போது விளைச்சல் குறைவதும், விளைச்சல் இருக்கும்போது விலை குறைவதும் விவசாயிகளின் வாழ்வில் தீராத சோகம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க