வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (18/12/2018)

கடைசி தொடர்பு:16:35 (18/12/2018)

`ரோட்டில் ஆரஞ்சு டிரஸ்ஸைப் பார்த்தாலே ஓடிவந்து உதவுவாங்க’- ஸ்விக்கி பாய்ஸ் குறித்து நெகிழும் முதல் டெலிவரி பெண்

மனித தேவைகள் வளர வளரத் தொழில்நுட்பங்களும் அதற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்துகொண்டே செல்கின்றன. முன்னதாக வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறைதான் ஹோட்டலுக்குச் சென்று உணவு அருந்துவோம். ஆனால், தற்போது உள்ள நவீன உலகத்தில் நாம் இருக்கும் இடத்தைத்தேடி உணவுகள் வந்துகொண்டிருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு செயலிதான் ‘ஸ்விக்கி’. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்து வருகிறது. 

ஸ்விக்கி

இருந்தும் இந்த நிறுவனத்தின் மீது சில குறைகளும் உள்ளது. உதாரணமாக, ஸ்விக்கியின் அதிகரிப்பினால் தங்களுக்கு வியாபாரம் குறைந்துவிட்டதாக தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் சம்பள பற்றாக்குறை காரணமாக சென்னையில் உள்ள டெலிவரி ஊழியர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இப்படி அதிருப்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பாதையில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டே வருகிறது ஸ்விக்கி நிறுவனம். அப்படி ஒரு பெரும் முன்னேற்றமாக டெலிவரி வேலைக்குப் பெண்களை நியமித்துள்ளது அந்நிறுவனம். 

சென்னையில் பல பகுதிகளில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அந்த வேலையில் பெண்களைப் பார்ப்பது மிகவும் குறைவு. அந்தக் குறையைப் போக்க தற்போது பெண்களும் டெலிவரி பணியில் இணைந்துவிட்டனர். தமிழகத்தின் முதல் ஸ்விக்கி டெலிவரி பெண்ணான ஜெயலஷ்மியை நாம் தொடர்புகொண்டு பேசினோம். போனை எடுத்ததும் மிகவும் உற்சாகமாக வரவேற்று தன் பணி தொடர்பான சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

ஸ்விக்கி ஜெயலஷ்மி

``சென்னையின் முதல் ஸ்விக்கி டெலிவரி பெண் எனப் பலரும் என்னைச் சொல்கிறார்கள். இதைக் கேட்கும்போது என்னைவிட என் பிள்ளைகள்தான் அதிக பெருமையடைகிறார்கள். ஆனால், எனக்கு இது பெரிதாகத் தெரியவில்லை. வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற குடும்ப சூழ்நிலையில் நான் உள்ளேன். இந்த வேலையை நான் தேர்வு செய்ததால் பலரும் என்னை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். அவர்களை சிறந்த முறையில் படிக்கவைத்து ஆளாக்க வேண்டும் என்பதுதான் என ஆசை. 

முதலில் என் சகோதருக்காகதான் இந்த நிறுவனத்தில் வேலை கேட்டுச் சென்றேன். அவனுக்கு இந்த வேலைசெய்யப் பிடிக்கவில்லை எனச் சொல்லிவிட்டான். பிறகு எனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்டேன். தற்போது எதும் இல்லை. விரைவில் பெண்களை எடுக்கவுள்ளோம். அப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறோம் எனக் கூறினார்கள். பிறகு ஸ்விக்கி நிறுவனத்திலிருந்தே எனக்கு கால் செய்து வேலை தருவதாகக் கூறினார்கள். நான் மறுதினமே சென்று பணியில் சேர்ந்தேன். கடந்த ஒரு மாதமாக நான் டெலிவரி செய்து வருகிறேன். இந்த வேலை எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. 

ஸ்விக்கி ஜெயலஷ்மி

நான் செங்குன்றம் அருகில் வசித்து வருகிறேன். இதற்கு முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். தினமும் பைக்கில் வந்து பழகியதால் தற்போது வாகனம் ஓட்டுவது எனக்குப் பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை. முதன்முதலாக ஒரு பெண் டெலிவெரி செய்வதைப் பார்த்ததும் வாடிக்கையாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். அனைவரும் அன்பாகவே பேசுவார்கள். சிலர் என்னுடன் போட்டோக்கூட எடுத்துள்ளனர். 

பிற்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரைதான் எனக்கு வேலை நேரம். குழந்தைகளைக் கவனித்து பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலைகள் செய்ய இந்த நேரம் எனக்கு வசதியாக உள்ளது. ஸ்விக்கியைப் பொறுத்தவரை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்றுதான். ஆனால், பெண்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மாலை 6 மணிக்கு மேல் எந்தப் பெண்களும் வேலை செய்யக்கூடாது. அதேபோல் காலை 9 மணிக்கு மேல்தான் வேலையைத் தொடங்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. அதன்படிதான் தற்போது பெண்கள் வேலை செய்து வருகிறோம். என்னுடன் சேர்த்து தற்போது 4 பெண்கள் ஸ்விக்கியில் வேலை செய்து வருகின்றனர். பாதுகாப்பான இடங்களுக்கு மட்டும்தான் பெண்கள் டெலிவரி செய்ய அனுப்பப்படுவார்கள். 

ஸ்விக்கி ஜெயலஷ்மி

அதிகபட்சமாக 6 முதல் 7 கிமீ தூரம் வரை சென்று நான் உணவு டெலிவரி செய்துள்ளேன். வாடிக்கையாளர்களின் முகவரி தெரியாமல் பலமுறை திண்டாடியுள்ளேன். அப்போது அவர்களுக்கு போன் செய்து கேட்டால் அவர்களே சரியாக இடம் சொல்லிவிடுவார்கள். அதிலும் போனில் பெண்ணின் குரல் கேட்டால் பெண்ணா என ஆச்சர்யப்பட்டுவிட்டு நீங்கள் பொறுமையாக வாருங்கள். அவசரமில்லை என்றும் சிலர் கூறுவார்கள். 

என்னுடன் வேலை செய்யும் சக டெலிவரி ஊழியர்கள் அனைவரும் அன்பாக நடந்துகொள்வார்கள். எல்லா உதவிகளும் செய்வார்கள். இன்று நான் ஒரு ஊழியரைப் பார்த்தால் நாளை அவரைப் பார்க்கமுடியாது. அப்படிதான் எங்கள் வேலை இருக்கும். சென்னையில் ஆரஞ்சு நிற சட்டையுடன் பலர் சுற்றுவார்கள். ஆரஞ்சு சட்டையுடன் நான் வழி தெரியாமல் சாலையில் நின்றால் அந்த வழியாகப் போகும் பிற ஊழியர்கள் என்னிடம் வந்து என்ன பிரச்னை என விசாரித்து எனக்கு உதவுவார்கள். சிலர் நீண்ட தூரம் U-turn செய்துவந்தெல்லாம் எனக்கு உதவியுள்ளனர். ஒரு முகவரி தெரியவில்லை என நான் கூறினால் அவர்களே என்னை அந்த முகவரிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டுத்தான் அவர்களின் டெலிவரிக்குச் செல்வார்கள். நாம் யாரிடமும் உதவி எனக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. முகம் தெரியாத யாராக இருந்தாலும் ஆரஞ்சு சட்டையைப் பார்த்தால் ஓடி வந்து உதவுவார்கள்” எனக் கூறி நெகிழ்ந்தார். 

மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஜெயலஷ்மி.