படுக்கையில் 2 குழந்தைகள்; தூக்கில் கணவன், மனைவி! - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் விபரீதம் | two child and wife murdered in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (18/12/2018)

கடைசி தொடர்பு:13:53 (18/12/2018)

படுக்கையில் 2 குழந்தைகள்; தூக்கில் கணவன், மனைவி! - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் விபரீதம்

 கண்ணகிநகரில் தற்கொலை செய்த கணவன் பாபு, கொலை செய்யப்பட்ட மனைவி விமலா மற்றும் குழந்தைகள்


சென்னை கண்ணகி நகரில் உள்ள பூட்டிய வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாகக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருகே உள்ள எழில் நகரைச் சேர்ந்தவர் பாபு (30). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி விமலா (27). இவர்களின் மகன் கிஷோர் (6) மகள் தியா (4). இவர்கள் வீடு நேற்று முழுவதும் உள்பக்கமாக பூட்டியே கிடந்தது. வீட்டிலிருந்து யாரும் வெளியில் வரவில்லை. குறிப்பாகக் குழந்தைகள்கூட விளையாட வரவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக பாபுவின் தந்தை மனோகரனுக்கும் அம்மா விஜயாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது பாபு, விமலா ஆகியோர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இரண்டு குழந்தைகளும் சடலமாகப் படுக்கையில் கிடந்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

கண்ணகி நகரில் கொலை செய்யப்பட்ட குழந்தை

இதையடுத்து, கண்ணகி நகர் காவல் நிலையத்துக்கு விஜயா தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக நடந்த சண்டையில் 4 பேரும் இறந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களில் பாபுவும் விமலாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இதனால் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாபு, வேலைக்குச் சரிவர செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அந்தக் குடும்பமே நிம்மதியை இழந்து தவித்துவந்துள்ளது. கடந்த 14-ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமலா, குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு மனம் மாறிய பாபு, கடந்த 16-ம் தேதி திருக்கழுக்குன்றம் சென்று மனைவியைச் சமாதானம் செய்து குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்துள்ளார். 

கண்ணகி நகரில் அப்பாவால் கொலை செய்யப்பட்ட குழந்தை

வீட்டுக்கு வந்தப்பிறகு 17-ம் தேதி மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாபு, வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். பிறகு மனைவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். விமலாவின் கழுத்தை அறையின் ஜன்னலோடு சேர்த்து கயிற்றால் நெரித்துள்ளார் பாபு. அப்போது அவரிடம்  என்னை விட்டுடுங்கள் என்று விமலா  கதறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு இரண்டு குழந்தைகளும் அறைக்கு வந்துள்ளனர். அதற்குள் விமலாவின் கதையை முடித்துவிட்டு தூக்கில் தொங்குவதைப்போல செய்துள்ளார். இருப்பினும் அவர் தரையில் முட்டு போட்டப்படி இறந்துள்ளார். இதையடுத்து, இன்னொரு கயிற்றை எடுத்து இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் நெரித்துக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, அதே கயிற்றில் பாபுவும் தற்கொலை செய்துள்ளார். நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது பாபு, இரண்டு குழந்தைகள் என மூன்று பேரின் சடலங்கள் ஒரு அறையிலும் விமலாவின் சடலம் மட்டும் இன்னொரு அறையிலும் கிடந்தன" என்றனர். 

 கண்ணகி நகரில் மனைவியை கொலை செய்த கணவன் பாபு

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகையில், ``விமலாவை காதலித்து திருமணம் செய்தவர் பாபு. குழந்தை கிஷோர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவந்தார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் பாபு, மனைவி விமலாவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். நாங்கள்கூட பல தடவை சமரசம் செய்துவைத்துள்ளோம். பாபுவால் விமலா, நிம்மதியாக வாழ முடியாமல் தவித்தார். அடிக்கடி அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவார். அப்போது பாபு, இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விமலா, குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவருவார். ஆனால், மீண்டும் குடித்துவிட்டு தகராறு செய்வார். அவர், குடிக்கவில்லை என்றால் அமைதியாக இருப்பார். மனைவி, குழந்தைகள்மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார். குடித்துவிட்டால் அவ்வளவுதான். வீடே ரணகளமாகிவிடும். சம்பவத்தன்றுகூட அந்த வீட்டில் தகராறு நடந்தது. வழக்கமான சண்டை என்பதால் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு பூட்டி இருந்ததால்தான் சந்தேகம் ஏற்பட்டது. ஜன்னல் வழியாக பார்த்தபோதுதான் 4 பேரும் இறந்துகிடந்தார்கள். பாபுதான் மற்ற மூன்று பேரை கொலை செய்திருக்க வேண்டும். அதன்பிறகு அவரும் தற்கொலை செய்திருப்பார்" என்றனர். 

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது பாபுவின் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். குடிப்பழக்கத்தால் காதல் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்துள்ளார் ஆட்டோ டிரைவர் பாபு. அதன்பிறகு அவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் கண்ணகி நகர், எழில் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.