தண்ணி காட்டிய சின்னத்தம்பி; கோவை விநாயகன் பிடிபட்ட கதை! | Story of Coimbatore wild elephant Vinayagan translocation

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (18/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (18/12/2018)

தண்ணி காட்டிய சின்னத்தம்பி; கோவை விநாயகன் பிடிபட்ட கதை!

கோவை, மாங்கரை, தடாகம், சின்னதடாகம் பகுதிகளில் சுற்றித்திரியும் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி காட்டு யானைகளைப் பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சின்னத்தம்பி விநாயகன்

இதையடுத்து, விநாயகன் காட்டு யானைக்கு மயக்க ஊசிப்போட்டுப் பிடித்துள்ளனர். இந்த யானையை முதுமலை - பந்திப்பூர் சாலை அருகே, வனப்பகுதியில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு யானைகளைப் பிடிக்க விவசாயிகள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, யானைகளைப் பிடிக்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வனத்துறைக்கு பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில், விநாயகன் மற்றும் சின்னத்தம்பியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். முதுமலை மற்றும் சாடிவயல் முகாம்களில் இருந்து வசீம், பொம்மன், விஜய், சேரன் ஆகிய 4 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. இதில், விநாயகன் யானை மஸ்தில் இருந்து வருகிறது. இதனால், 15 வயதாகும் சின்னத்தம்பியைப் பிடிக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியானது. இரண்டு யானைகளையும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

விநாயகன்

நேற்று இரவு வரை சின்னத்தம்பியை தான் முதலில் பிடிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக, அதிகாலை வரை சின்னத்தம்பியை வனத்துறையினர் ஃபாலோ செய்துள்ளனர். ஆனால், சின்னத்தம்பியுடன் மேலும் இரண்டு காட்டு யானைகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதனால், அதை வனத்துறையால் பிடிக்க முடியவில்லை. வனத்துறை வாகனம் அருகே வந்த சின்னத்தம்பி விடிவதற்குள் வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இதனிடையே, மஸ்தில் இருக்கும் விநாயகன் இன்று அதிகாலை பெரியதடாகம் பகுதி அருகே வந்துள்ளது. காலை 6 மணி வரை மணியளவில் விநாயகனுக்கு முதல் ஊசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, வனப்பகுதிக்குள் சென்ற விநாயகனுக்கு சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்து மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. தற்போதுவரை, விநாயகனுக்கு 6 ஊசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், அவற்றின் கால் மற்றும் உடல் பகுதியில் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன.

விநாயகன்

வாகனத்தில் ஏற்றியவுடன் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்ற விநாயகனுக்கு சற்று ஒய்வு கொடுக்க உள்ளதாகவும், பின்பு முதுமலை வனப்பகுதியில் விட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 35 வயதாகும் விநாயகன், கோவையில் இருக்கும் மிகப்பெரிய ஆண் யானை என்பது குறிப்பிடத்தக்கது.