`கன்சல்டேஷன் 71 லட்சம்... உணவு 1.17 கோடி’’ - ஜெயலலிதாவின் மருத்துவமனை பில்! #VikatanInfographics | Apollo hospital submit Jayalalitha's medical bill to Arumugasamy Commission!

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (18/12/2018)

கடைசி தொடர்பு:21:06 (18/12/2018)

`கன்சல்டேஷன் 71 லட்சம்... உணவு 1.17 கோடி’’ - ஜெயலலிதாவின் மருத்துவமனை பில்! #VikatanInfographics

ஜெயலலிதா

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அந்த ஆண்டின் செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல், சர்க்கரை வியாதி, மூச்சுக்குழாய் அழற்சி, நீர்ச்சத்து குறைபாடு, இதயப் பிரச்னைகள் முதலானவை இருந்தன. 75 நாள்கள் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இறப்புக்குப் பின், ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. 

2017-ம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் முதல்வர், துணை முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டி.டி.வி.தினகரன் முதல் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் வரை, அவரது மறைவில் அவருடன் இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை ஆணையம் பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா இறுதியாக சிகிச்சைக்காகத் தங்கியிருந்த அப்போலோ மருத்துவமனையின் ரசீது ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 6.85 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அப்போலோ நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவர் கன்சல்டேஷனுக்கு 71 லட்ச ரூபாயும் உணவுக்கு 1.17 கோடி ரூபாயையும் குறிப்பிட்டுள்ளது அப்போலோ நிர்வாகம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, 41 லட்ச ரூபாய் கட்டணம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவரது மறைவுக்கு, 7 மாதங்கள் கழித்து, ஜூன் 15, 2017 அன்று அ.தி.மு.க கட்சி மூலம் 6 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் நிலுவையாக 44 லட்ச ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளது.