`நான் செய்தது தவறுதான்... மன்னித்துவிடுங்கள்!’ - உயர் நீதிமன்றத்தில் கைகூப்பிய புழல் எஸ்.பி  | Puzhal prison sp seeks unconditional apology in madras highcourt

வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (18/12/2018)

கடைசி தொடர்பு:16:29 (18/12/2018)

`நான் செய்தது தவறுதான்... மன்னித்துவிடுங்கள்!’ - உயர் நீதிமன்றத்தில் கைகூப்பிய புழல் எஸ்.பி 

`கைதி அசோக்குமாரை வேறு பிளாக்குக்கு மாற்றவில்லை. அவர்தான் மிக மோசமாக நடந்துகொள்கிறார்' எனக் குறிப்பிட்டிருந்தார் எஸ்.பி. இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம் கோபத்தைக் காட்டினர். 

`நான் செய்தது தவறுதான்... மன்னித்துவிடுங்கள்!’ - உயர் நீதிமன்றத்தில் கைகூப்பிய புழல் எஸ்.பி 

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டிருக்கிறார் புழல் சிறை எஸ்.பி செந்தில்குமார். `இனி கைதிகளிடம் இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள்' என அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர் நீதியரசர்கள். 

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக சிறைச் சாலைகளில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, தொடர் சோதனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றலாகி வந்தார் எஸ்.பி செந்தில்குமார். ஏற்கெனவே, கைதிகளிடம் இவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. பலமுறை நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியும், புழல் சிறையிலும் தன்னுடைய பாணியை இவர் கைவிடவில்லை. அதிலும், `ஏ பிளாக்' கைதியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை ஹெச்.ஐ.வி மற்றும் மனநலம் பாதித்த கைதிகளோடு அடைத்துவிட்டார்.

புழல் சிறை விளக்கம் 

இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளாகிய கைதி அசோக்குமார், தன்னுடைய மனைவி மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி தலைமையில், புழல் சிறையில் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டனர் நீதியரசர்கள் சி.டி.செல்வமும் ராமதிலகமும். மாவட்ட நீதிபதியும் புழல் சிறையில் நேரடியாக ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார். புழல் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் அறிக்கையாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 

புழல் சிறை விளக்கம்

இதையடுத்து நடந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான கண்காணிப்பாளர் செந்தில்குமார், `அந்தக் கைதி ராஜபக்சேவுக்கு ரைட் ஹேண்டாக இருக்கிறார். சிறையில் இருப்பவர்களுக்கு அவர்தான் கேங்க் லீடர். அதனால்தான் செல்லுலர் பிளாக்கில் வைத்தோம்' எனத் தெரிவித்தார். இந்தப் பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், கடந்த 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். அன்று எஸ்.பி தாக்கல் செய்த அறிக்கையில், `கைதி அசோக்குமாரை வேறு பிளாக்குக்கு மாற்றவில்லை. அவர்தான் மிக மோசமாக நடந்துகொள்கிறார்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம் கோபத்தைக் காட்டினர். 

புழல் எஸ்.பி விளக்கம்

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் நீதியரசர்கள் சி.டி.செல்வம், ராமதிலகம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.பி செந்தில்குமார் தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், `நான் செய்தது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதை நீதிபதிகளிடமும் தெரிவித்துவிட்டு, கைகூப்பினார். இதற்குப் பதில் கொடுத்த நீதியரசர் சி.டி.செல்வம், `மன்னிப்புக் கேட்டதால் விடுகிறோம். இனிமேல் இதுபோல் நடந்துகொள்ளாதீர்கள். யாரையும் டார்ச்சர் செய்யாதீர்கள்' எனக் கூறினார். 

அதேநேரம், ` இந்த வழக்கில் சிறைத்துறை எஸ்.பி-யின் மனிதத்தன்மையற்ற செயல்பாட்டை வெளியில் கொண்டு வந்ததில் வழக்கறிஞர் ரவிக்குமாருக்குப் பெரிய பங்கு உண்டு. நீதிமன்றத்தில் எஸ்.பி தாக்கல் செய்த அபிடவிட்டிலும், ` கைதி அசோக்குமாரை செல்லுலர் பிளாக்கில் அடைக்கவில்லை' எனப் பொய்யான தகவலைத் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். சிறையில் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் மிகுந்த கவலையில் உள்ளனர் கைதிகள். அவரால் சிறைத்துறைக்கே தலைகுனிவு' என ஆதங்கப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.