`2,000 பேர் ஒரே மதிப்பெண்?’ - தொடக்கப்பள்ளி ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு | Primary school teacher exam results has been stopped by DGE

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (18/12/2018)

கடைசி தொடர்பு:18:05 (18/12/2018)

`2,000 பேர் ஒரே மதிப்பெண்?’ - தொடக்கப்பள்ளி ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. 

அரசுத் தேர்வுகள் இயக்ககம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுகள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழகம் முழுவதும் 3,000 ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தேர்வு

இந்தநிலையில், திருத்தி அனுப்பப்பட்ட விடைத்தாள்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுமதிப்பீடு செய்தது. அப்போது, சுமார் 2,000 பேர் ஒரேமாதிரி 50 மதிப்பெண் எடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதுவும் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, இம்மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. விடைத்தாள்கள்களை மீண்டும் ஆய்வு செய்த பின்னர்,தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதேநேரம் முறைகேடு குறித்து விசாரணையும் நடத்தப்பட இருக்கிறது.