வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (18/12/2018)

கடைசி தொடர்பு:21:52 (18/12/2018)

ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமாக உள்ள இந்தக் கோயில் தமிழக அரசின் முத்திரை என்ற பெருமை கொண்டது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று அதிகாலை பரமபதவாசல் (சொர்க்க வாசல்) திறக்கப்பட்டது. அப்போது ரெங்கமன்னார், ஆண்டாள் சொர்க்கவாசல் வழியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நிர்வாகத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு முன் 10 நாள்கள் பகற்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை முதல் 10 நாட்களுக்கு ராப்பத்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ராப்பத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்குத் தினமும் இரவு சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம்  கூறியது, ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது சமூகவிரோதிகள் ஊடுருவியதால்தான் பிரச்னை ஏற்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் பக்குவமில்லாமல் அவசரப்பட்டு அறிவித்துள்ளார். இதனால் அந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்படும். இதன் விளைவு இனிமேல்தான் தெரியும். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனிநபராகச் சிலைகளை மீட்கவில்லை. அரசின் துணையுடன்தான் சிலைகளை மீட்டார். நேர்மையானவர்களுக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்.

அ.தி.மு.க யாரைப் பார்த்தும் பயப்படாது. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். அ.ம.மு.க-வில் இருந்து யார் வந்தாலும் அ.தி.மு.க ஏற்கத் தயாராகவே உள்ளது. சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவெடுப்பர் எனத் தெரிவித்தார்.