வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (18/12/2018)

கடைசி தொடர்பு:18:33 (18/12/2018)

திரையில் நாம் ரசித்த எம்.ஜி.ஆர், ரஜினி முகங்களின் பின்னால் இருந்த ஒப்பனைக்காரர் காலமானார்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல் ஆகியோரின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா தனது 75வது வயதில் இன்று காலை காலமானார். 

முத்தப்பா
 

ஒப்பனைக் கலைஞர் முத்தப்பா, ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக ஒப்பனை செய்தவர். கமலஹாசனின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ உட்படப் பல படங்களில் ஒப்பனையாளராகப் பணியாற்றியவர். ‘ஏவி.எம்’ முத்தப்பா என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். முத்தப்பா அப்போதைய முன்னணி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் சிபாரிசில் தென்னிந்திய சினிமாவில் ஒப்பனைக் கலைஞராகக் கால்பதித்தார். சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் முதன்முதலில் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார் முத்தப்பா. 

முத்தப்பா
 

60 ஆண்டுகளாக முன்னணி ஹீரோ - ஹீரோயின்களுக்கு மேக்-அப் போட்டவர். எம் ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களின் ஆஸ்தான மேக்-அப் மேன். ஒருகட்டத்தில் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவரிடமே  பணியாற்றத் தொடங்கினார். ரஜினியின் சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் தோன்றியிருக்கிறார். 

ரஜினி
 

ஒப்பனைக் கலைஞராகத் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட மேக்-அப் மேன் முத்தப்பா இன்று காலை வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி காலமானார். அவரது உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தும் அஞ்சலி செலுத்தினார். 

முத்தப்பாவின் பூத உடல் வைக்கப்பட்டுள்ள அவரின் இல்ல முகவரி  No : 78/33 துரைசாமி ரோடு, வடபழனி, சென்னை-26 

தொடர்புக்கு: திரு.மனோகரன் 
முத்தப்பா (மகன்) +919884685505

நீங்க எப்படி பீல் பண்றீங்க