`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்!’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல் | karur collector advice people to avoid plastics

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/12/2018)

கடைசி தொடர்பு:20:14 (18/12/2018)

`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்!’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்

``கரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் 100 சதவிகிதம் செயல்படுத்த முடியாது’’ என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பிளாஸ்டிக் தடை பற்றிய சிறப்பு கிராமசபை கூட்டம்

தமிழகம் முழுவதிலும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விழிப்பு உணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தும் விதமாகக் கரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் இன்று (18.12.2018) நடைபெற்றது. கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மின்னாம்பள்ளி பஞ்மாதேவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கலந்துகொண்டார்.

பிளாஸ்டிக் தடை அறிவுரை வழங்கும் ஆட்சியர் அன்பழகன்

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், ``தமிழக முதலமைச்சர் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். வரும் 01.01.2019 முதல் பிளாஸ்டிக் பயன்பாடு தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் பைகள், உணவை மூடவும் மேசைமீது போடவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப்புகள், டம்ளர்கள், குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கவோ, இருப்பு வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. அப்படி மீறி 01.01.2019-க்குப் பிறகு, பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

கிராமசபை கூட்டத்தில் மக்கள்...

கால்நடைகள், பறவைகள் போன்றவை நம்மால் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை உட்கொள்வதால் உணவுக்குழல் அடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றன. வீட்டிலிருந்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுகிறது. சாதரணமாக பிளாஸ்டிக் பொருள்கள் மக்குவதற்கு 100 முதல் 1,000 ஆண்டுகள் ஆகின்றன. பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், டம்ளர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சுய உதவிக் குழுவினர் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால், நல்லமுறையில் விற்பனை செய்யலாம். மாற்றம் என்பது முதலில் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் நமது சமுதாயமே பிளாஸ்டிக் இல்லாத சமூகமாக உருவெடுக்கும். அரசின் எந்தவொரு திட்டம் நிறைவேற வேண்டும் என்றாலும், அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் வரவேற்பும் இன்றியமையாதது. எனவே, நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கு அனைவரும், முழு ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும்" என்றார்.