வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (18/12/2018)

கடைசி தொடர்பு:20:43 (18/12/2018)

`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி!’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆம்பூர் அருகே ரூ.80 கோடி பணத்துடன் கண்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பழுதான லாரிக்கு பாதுகாப்பு

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் வங்கிக்கு இரண்டு கண்டெய்னர் லாரிகளில் ரூ.80 கோடி பணம் இன்று மாலை கொண்டு செல்லப்பட்டது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில் சுமார் 22 போலீஸார் உடன் சென்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து கண்டெய்னர் லாரிகள் சென்றுகொண்டிருந்தன. 
ஆம்பூர் அடுத்த செங்கலிகுப்பம் என்ற பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நடுரோட்டிலேயே நின்றது. இதனால் பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் நிறுத்தப்பட்டது. லாரி பழுதுக்கு என்ன காரணம் என்று முதலில் தெரியாததால் பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீஸார் உடனடியாக ‘அலர்ட்’ ஆகி கண்டெய்னர்களைச் சுற்றி வளைத்து துப்பாக்கி ஏந்தி நின்றனர்.

பழுதான லாரிக்கு பாதுகாப்பு

இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சற்று தொலைவிலேயே நின்றுகொண்டனர். இதையடுத்து, அங்குள்ள அசோக் லேலாண்ட் சர்வீஸ் சென்டரில் பழுதான கண்டெய்னர் லாரியை சரிபார்த்தனர். அதில் இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் லாரி நின்றது தெரியவந்தது. இதையடுத்து, பழுதைச் சரிசெய்த உடன் பணத்துடன் லாரிகள் இயக்கிச் செல்லப்பட்டன. போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் பின்தொடர்ந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.