`மேக்கேதாட்டூவில் அறவழி கொரில்லாப் போராட்டம் நடத்தவும் தயார்!’ - கொந்தளித்த காவிரி உரிமை மீட்புக் குழு | Rally organised in tanjore over Mekedatu dam issue

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (18/12/2018)

`மேக்கேதாட்டூவில் அறவழி கொரில்லாப் போராட்டம் நடத்தவும் தயார்!’ - கொந்தளித்த காவிரி உரிமை மீட்புக் குழு

பேரணி 

கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டூவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால், வெள்ளக் காலங்களில்கூட, அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வராது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு குடிநீரும் கிடைக்காது. மிகப்பெரும் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பெரிய கட்சிகள் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை இதுவரையிலும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில்தான் இன்று தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நடத்திய மாபெரும் கண்டனப் பேரணி உணர்ச்சிபூர்வமாக அமைந்ததோடு, தீவிர போராட்டத்துக்கான தொடக்கப்புள்ளியாகச் சுடர்விட்டது.

பல்வேறு அரசியல் இயக்கங்கள், விவசாயச் சங்கங்கள், தமிழின உணர்வாளர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அந்தப் பேரணி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நீண்டுகொண்டே சென்றது. பேரணியில் வந்தவர்கள், ‘காவிரி எங்கள் ரத்த ஓட்டம். காவிரி எங்கள் வளர்ப்புத் தாய். உயிர் கொடுத்து காவிரி காப்போம். மேக்கேதாட்டூ அணை தகர்ப்போம்’ என உணர்ச்சிபூர்வமாக முழக்கம் எழுப்பினார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிவகங்கை பூங்கா, திலகர் திடல், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளின் வழியே பேரணி சென்றதால், பொதுமக்களும் உணர்வுபூர்வமாகக் காணப்பட்டார்கள். ``இதுவே வேற மாநிலமாக இருந்தால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் ஒண்ணு சேர்ந்து, மத்திய அரசை உலுக்கியிருப்பாங்க. ஆனால், இங்க பாருங்க. எடப்பாடி பழனிசாமி சும்மா இருக்கார். ஸ்டாலினும் இதைப் பெருசா கண்டுக்கலை’’ எனப் பொதுமக்கள் ஆதங்கத்தோடு பேசிக்கொண்டார்கள்.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்

பேரணியின் முடிவில் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``உயிரைப் பாதுகாப்பதுபோல், காவிரியை நாம் பாதுக்க வேண்டும். மேக்கேதாட்டூ அணைக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக எம்.பி-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் ஒண்ணு சேர்ந்து காவிரி காப்பு நாள் அறிவிச்சு, குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை எழுச்சிப் பேரணி நடத்த வேண்டும். இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து, மத்திய அரசு அலுவலகங்களை முடக்கும் விதமாக ஒரு வாரத்துக்குப் போராட்டம் நடத்த வேண்டும். நாங்கள் மேக்கேதாட்டூவுக்கே சென்று அறவழியில் கொரில்லாப் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்” என்றார்.