வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:10 (19/12/2018)

`வாழைத்தார் விலை வீழ்ச்சி’ - வாழ்வு இழந்து நிற்பதாக விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாழைத்தாருக்கு போதிய விலை கிடைக்கவில்லை என வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வாழை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி காமாட்சி, ``எங்கள் பகுதியில், கற்பூரவள்ளி, சக்கை, பூவன் ஆகிய வாழை ரகங்கள் பயிர்செய்துள்ளோம். கன்று ஒன்று 12 முதல் 15 ரூபாய்க்கு வாங்கி நடவு செய்துள்ளோம். கன்றை ஓர் ஆண்டு கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வளர்த்து எந்தப் பலனும் இல்லை. 300 முதல் 500 ரூபாய்க்கு விற்பனை ஆக வேண்டிய வாழைத்தார், தற்போது 50 முதல் 100 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால், வாழைத்தாரை வெட்டாமல், மரத்திலேயே விட்டுவைத்துவிடுகிறோம்.

கற்பூரவள்ளி

எனக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. வாழைத்தாரின் விலை வீழ்ச்சியால், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மரத்திலிருந்து வாழைத்தாரை வெட்டாமல் விட்டுவிட்டேன். கடன் வாங்கி வாழை பயிரிட்டும் எந்தப் பலனும் இல்லை.” என்று வேதனை தெரிவித்தார். வாழைத்தாரின் விலை வீழ்ச்சியால், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் வாழை விவசாயிகள்.