`தனியார் நிலத்தில் குவித்துவைக்கப்பட்ட மணல்!’- வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை | 10 unit sand accumulated in theni

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:15 (19/12/2018)

`தனியார் நிலத்தில் குவித்துவைக்கப்பட்ட மணல்!’- வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை

அனுமதி இன்றி மணலைக் குவித்துவைத்திருந்ததாக பெண்ணிடம் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில், கடந்த சில மாதங்களாகவே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குப் பல முறை புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை என்றும் புலம்பிவருகின்றனர் பெரியகுளம் வாசிகள். இந்த நிலையில்,நேற்று, கைலாசப்பட்டி பகுதியில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் வருவாய்த்துறை ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் பொதுப்பணித் துறையினர், காவல்துறையோடு மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதி இல்லாமல் குவித்துவைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் கண்டுபிடிக்கப்பட்டது. மணல் இருந்த இடம் மகாலெட்சுமி என்பவருக்குச் சொந்தமானது என்பதால், அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மணலுக்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது. உடனே அந்த 10 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. யார் இங்கே மணல் கொண்டுவந்து குவித்துவைத்தது. எங்கிருந்து மணல் எடுக்கப்பட்டது என அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மணல் திருட்டுச் சம்பவங்களுக்குப் பின்னால் ஆளும் தரப்பினர் இருக்கின்றனர் எனவும் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.