வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:09:23 (19/12/2018)

`டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு’- பிரியா விடைபெற்ற கோவை விநாயகன்

மயக்க நிலையிலும் தும்பிக்கையைத் தூக்கிக் காண்பித்து பிரியா விடை பெற்றது கோவை விநாயகன்.

விநாயகன்

கோவை விளைநிலங்களைச் சேதப்படுத்துவதாக புகார் கூறப்பட்ட விநாயகன் என்ற காட்டு யானை நேற்று முதுமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக காலை 6 மணிக்கு விநாயகனுக்கு முதல் மயக்க ஊசி போடப்பட்டது. அடுத்தடுத்து, விநாயகனை வண்டியில் ஏற்ற 4 கும்கிகள், 3 ஜே.சி.பிகளை வைத்து வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், விநாயகனின் கம்பீர தோற்றத்தைக் கண்ட கும்கிகள், அதன் அருகில் வருவதற்கே மிகவும் தயங்கின. ஒரு கட்டத்தில், சோர்ந்து போயிருந்த விநாயகன் பிளிறவே, விஜய் என்ற கும்கி யானை பின்வாங்கிவிட்டது. அப்போது, அங்கிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து, விநாயகனைக் கட்டுப்படுத்த மேலும் சில மயக்க ஊசிகள் போடப்பட்டன. உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப்பட்டன. லாரியில் ஏற்றப்பட்ட விநாயகனின் சோர்ந்துபோன முகத்தைக் கண்ட பலரது முகங்களும் சோர்ந்து போனது. அந்த நேரத்தில் விநாயகன் திடீரென்று ஒரு சிளிர்ப்பு சிளிர்க்கவே, கயிறுகள் அறுந்துபோனது. இதனால், மக்கள் மீண்டும் ஆரவாரம் செய்தனர். விநாயகனின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக, அதன் உடம்பில் ரேடியோ காலரிங் பொறுத்தப்பட்டுள்ளது.

விநாயகன்

ஒரு வழியாக, மாலை 4.30 மணியளவில் விநாயகனை வாகனத்தில் செட்டில் செய்தனர். லாரி கிளம்பும்போது, மிகவும் சோர்வாக காணப்பட்ட விநாயகன், அந்த நேரத்திலும் தும்பிக்கையைத் தூக்கி காட்டி, ``நான் சென்று வருகிறேன்” என்பது போல சைகை காண்பித்துவிட்டு கிளம்பியது. அங்கிருந்த மக்களும், ``டேய் விநாயகா சீக்கிரம் வந்துடு” என்று கூறி 35 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் காட்டு ராஜாவாக வலம் வந்த விநாயகனுக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

விநாயகன்

விவசாய நிலங்களை அட்டகாசம் செய்வதாக கூறி விநாயகனை இடமாற்றம் செய்துவிட்டனர். காலம் காலமாக யானைகள் வாழ்ந்து வரும் வனத்தைச் சிதைக்கும் மனிதர்களைத் தண்டிப்பது யார்?