`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை | Megamalai village people suffer from lack of electricity

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:33 (19/12/2018)

`4 தலைமுறையா வாழும் இடத்தை விட்டு விரட்டும் வனத்துறை’ - மேகமலை மக்களின் கண்ணீர் கதை

நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் இடத்தை விட்டு வெளியேறும்படி வனத்துறை மிரட்டுவதாகவும், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைகிராம மக்கள்.

மேகமலை

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனூத்து, கூடம்பாறை, குழிக்காடு, நொட்சியோடை ஆகிய மலைகிராமங்களைச் சேர்ந்த சுமார் 250-க்கு மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ``மலையும், காடும் தான் எங்கள் வாழ்க்கை. பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு வனத்துறை எங்களை வெளியேறச் சொல்கிறார்கள். மலையை விட்டு நாங்கள் எங்கே செல்வது. அதனால்தான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தோம்.

மேலும், பல மலை கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை. அதை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மின்சாரம் வேண்டும் எனப் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை பலன் இல்லை. வனத்துறையின் மிரட்டல், மின்சாரம். இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துத் தான் ஆட்சியரை சந்தித்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மாவட்ட வன அலுவலரிடம் உங்கள் மனுவைக் கொடுத்துவிடுகிறேன் என்றார். நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகிறோம். இல்லையென்றால் அரசு எங்களுக்குக் கொடுத்த ரேஷன் கார்டு, ஆதார், சான்றிதழ்கள் என அனைத்தையும் கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர் மலை கிராம மக்கள்.

கிராம மக்கள்

நம்மிடம் பேசிய புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முனிசாமி, ``மாவட்ட வன அலுவலரைச் சந்தித்துப் பேசினோம். எங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தோம். நான்கு தலைமுறைகளாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதை அவரிடம் சொல்லியிருக்கிறோம். மின்சாரம் இன்றி பல மலை கிராமங்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அது தொடர்பாக வனத்துறை மின்சாரத்துறைக்கு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.” என்றார்.