‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி?'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன் | kaja cyclone DMK treasurer Duraimurugan Comments on PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:43 (19/12/2018)

‘சேதங்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஒரு அனுதாப செய்தி?'- பிரதமரை விமர்சித்த துரைமுருகன்

``நெல் களஞ்சிய மாவட்டம் அழிந்துள்ளது. பல மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. வந்து பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு அனுதாப செய்தியையாவது பிரதமர் சொல்லி இருக்க வேண்டும்'' என துரைமுருகன் கூறினார்.

துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுத் தலைவர் துரைமுருகன் தலைமையில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டம் முடிந்தபிறகு துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``குமரி மாவட்டத்தில் பொதுக் கணக்கில் பெரிய அளவில் தவறுகள் எதுவும் நடைபெறவில்லை. அறிவுரை கூறும் அளவு சின்னத் தவறுகள் நடைபெற்று உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிப்பது நாகரிகம் இல்லை. அந்த அமைச்சரை விட்டு வைப்பதும் அழகல்ல. முதல்வர் அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரைமுருகன்

இப்போதாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அது வரவேற்கத்தக்கது. தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி குறித்து ஜெயக்குமார் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் கருத்து கூறியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து குறைதான் கூறுவார்கள். புயல் நிவாரண நிதி கொடுப்பது இரண்டாவது விஷயம்,  கேரளாவில் புயல் சேதம் ஏற்பட்டபோது மோடி சுற்றிப் பார்த்தார், ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டபோது அனுதாபச் செய்தி அனுப்பினார். ஆனால், நெல் களஞ்சிய மாவட்டம் அழிந்துள்ளது. பல மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளது. வந்து பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு அனுதாபச் செய்தியையாவது பிரதமர் சொல்லியிருக்க வேண்டும். தமிழகம் மீது பிரதமருக்கு எவ்வளவு அலட்சியம் என்பது இதன்மூலம் தெரிகிறது.

ஆய்வு கூட்டம்

கர்நாடகம் கட்டிய ஒரு அணையே நமக்குப் பாதகமாக அமைந்து உள்ளது. மேக்கே தாட்டூ பெயரைச் சொல்லி வேறு இடத்தில் அணை கட்ட முயற்சி நடைபெறுகிறது. மத்திய அரசு தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்கிறது. கேபினட் கூடி ஸ்டெர்லைட் ஆலைக்குச் சரியான முடிவு எடுக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கு 1.17 கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கூறுகிறார்கள். ஐந்து கோடி ரூபாய்  செலவு செய்தாவது அவரைக் காப்பாற்றி இருந்தால் பரவாயில்லை, அனுப்பிவிட்டார்களே" என்றார்.