`பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்!’ - வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி | Vellore traffic police atrocity

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (19/12/2018)

கடைசி தொடர்பு:08:05 (19/12/2018)

`பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல்!’ - வேலூர் போக்குவரத்து போலீஸார் அடாவடி

வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் தினமும் முகாமிடும் போக்குவரத்து போலீஸார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் போடுவதாக மிரட்டி மாமூல் வேட்டையில் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாமூல்

தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. சென்னை-பெங்களூருவுக்கு இடையிலும், ஆந்திர மாநில எல்லையிலும் இருப்பதால் செம்மரம் மற்றும் கஞ்சா உட்பட போதைப் பொருள்கள் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது.  குற்றச் சம்பவங்களைத் தடுத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸாரே, பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிறார்கள். ஹெல்மெட் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனங்களை ஓட்டினால் அபராதம் போடுவதில் நியாயமிருக்கிறது. இதைவிடுத்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் தினமும் முகாமிடும் போக்குவரத்து போலீஸார், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு கூட அபராதம் போடுவதாக கூறி அடாவடி செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

குறிப்பாக சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்து போலீஸாரின் மாமூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் இருந்து சில மீட்டர் தூரமுள்ள கடைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்களை மடக்கி ‘ஹெல்மெட் எங்கே...’ என்று கேட்டு மிரட்டுகிறார்கள். ‘சார்... இது குடியிருப்பு பகுதி. ரோடு கிடையாது. அதோ தெரிகிறதே அதுதான் என் வீடு. இதோ இந்தக் கடைக்கு வந்தேன். நேற்று கூட என்னை மடக்கி 100 ரூபாய் வாங்கினீர்களே மறந்திட்டிங்களா...’ என்று பொதுமக்கள் கேள்வி கேட்டால், ‘போலீஸையே எதிர்த்து பேசுறியா...?’ என்று மிரட்டி குடிபோதையில் பைக் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்கிறார்கள். அரசியல்வாதி மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் மகன்கள் வந்தால், ‘வணக்கம் சார்... அப்பாவைக் கேட்டதா சொல்லுங்கள்...’ என்று கூறி சல்யூட் அடிப்பதாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள் போக்குவரத்து போலீஸார்.

குடியிருப்பு பகுதியில் தினமும் தொந்தரவு செய்யும் போலீஸாருக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டுமென எஸ்.பி.க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.