வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:53 (19/12/2018)

`18 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்’- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் நீதிமன்றம் அதிரடி

பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்ற குமரி மாவட்டம் பொன்மனையைச் சேர்ந்த ஷோபா குடும்பத்துக்கு மாதம் ரூ.5,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அதைச் செயல்படுத்தவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து குமரி ஆட்சியர் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துள்ளது.

ஷோபா

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனைப் பகுதியை சேர்ந்த ஆதர்ஷா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ``எனக்கு 18 வயது ஆகிறது. 18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் என் தாயார் ஷோபாவுக்கு மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்குச் சென்று விட்டார். 18 ஆண்டுகளாகியும் என் தாயை கோமா நிலையிலிருந்து மீட்க முடியவில்லை. நானும் உடல்நலக்குறைவாக உள்ள என் தாயாரும் வாழ வழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம். தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட என் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தவறான சிகிச்சை அளித்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.  அதைத்தொடர்ந்து ஷோபா குடும்பத்துக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் குமரி மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என கடந்த அக்டோபர் 10-ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால், நீதிமன்றம் தானாக முன்வந்து குமரி மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஷோபா

ஆதர்ஷாவின் தாய் ஷோபாவுக்கு பிரசவம் நடந்த குலசேகரம் கூட்டுறவு மருத்துவமனை தற்போது மூடப்பட்டுவிட்ட நிலையில், அவர்களிடம் இது தொடர்பாக இழப்பீடு கோர இயலுமா என்பது குறித்து அறிய வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் லஜபதிராயை நியமித்தும், தமிழக சுகாதாரத்துறை செயலர், தமிழக கூட்டுறவுத்துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.