கரூரில் காலியாகும் ம.தி.மு.க கூடாரம்... அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள் | MDMK tent is Going to empty in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (19/12/2018)

கடைசி தொடர்பு:08:11 (19/12/2018)

கரூரில் காலியாகும் ம.தி.மு.க கூடாரம்... அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள்

கரூர் மாவட்ட ம.தி.மு.கவைச் சேர்ந்த ஒரு மாநில நிர்வாகி, 8 ஒன்றியச் செயலாளர்கள், 2 நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 18 நிர்வாகிகள் தொண்டர்களோடு முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைய இருப்பதால், கரூர் மாவட்ட ம.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 மதிமுக

கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளராக இருப்பவர் கபினி சிதம்பரம். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், புதிய பொறுப்புகள் போடும்போது மாவட்ட, நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார், ம.தி.மு.க-வின் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளராக இருந்த கலையரசன். கட்சியின் ஆபத்து உதவிகள் குழுவின் மாநிலச் செயலாளராகவும் இருந்தார். வைகோவுக்கு மிகவும் பிடித்த நிர்வாகிகளில் கலையரசனும் ஒருவர்தான்.

கபினி சிதம்பரம்

இந்த நிலையில்தான், திடீரென இவர்12 நிர்வாகிகளோடு கடந்த 29 ம் தேதி, ``மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம் எங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். பலமுறை அவரைப் பற்றி வைகோவிடம் புகார் சொன்னோம். ஆனால், ம.தி.மு.க-வின் பொருளாளர் கணேசமூர்த்தி கபினி சிதம்பரத்தைக் காப்பாற்றுகிறார். மரியாதை இல்லாத இடத்தில் இனி என்ன வேலை" என்றபடி,கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து பரபரப்பை பற்ற வைத்தனர். அதன்பின், தொண்டர்களுடன் கூடி ஆலோசித்த கலையரசன் தலைமையிலான நிர்வாகிகள் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தி ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் முதல்வர் முன்னிலையில் விரைவில் அ.தி.மு.க-வில் இணைய முடிவு செய்திருக்கிறார்கள்.
 

கலையரசன்

இதுபற்றி நம்மிடம் பேசிய கலையரசன், ``ம.தி.மு.க ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்த மாவட்டம் கரூர். வைகோவை தி.மு.க-வில் இருந்து கலைஞர் நீக்கியதும், அதைக் கண்டித்து 5 பேர் தீக்குளித்து இறந்தார்கள். அதில் ஒருத்தர் கரூரைச் சேர்ந்த நொச்சிப்பட்டி தண்டாயுதபாணி. ஸ்டாலினை தி.மு.க-வில் முன்னிலைப்படுத்ததான் வைகோவை கலைஞர் வெளியேற்றினார். ஆனா, அதே ஸ்டாலினோடு இப்போ வைகோ கைகோத்துகிட்டு, 'ஸ்டாலினை பாதுகாப்பு கவசமாக இருந்து காப்போம்'ன்னு சொல்றார். இப்படி மாறிய வைகோவை ம.தி.மு.க உதயமாக காரணமாக இருந்து தீக்குளித்து மடிந்த அந்த 5 பேரின் ஆத்மாவும் மன்னிக்காது" என்று ஆக்ரோஷமாக பேசுகிறார் கலையரசன்.
 

கலையரசன்


``பதவிக்கே வராத ம.தி.மு.க-வில் இருந்துகொண்டு கடன் வாங்கி லட்சம் லட்சமா செலவு பண்ணி கரூர் மாவட்டத்துல கட்சியை நல்லா வளர்த்து வச்சுருக்கோம். ஆனா, மாவட்டச் செயலாளர் எங்களையே மதிப்பதில்லை. அவரை கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி பாதுகாக்கிறார். அதனால்தான் கட்சியை விட்டு வெளியே வந்தோம். நான், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அருண் தங்கவேல், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கேசவன், ஒன்றியச் செயலாளர்கள் க.பரமத்தி (வடக்கு) அப்பன் பழனிசாமி, தான்தோன்றிமலை (கிழக்கு) தென்றல், தான்தோன்றிமலை (மேற்கு) ஜெயராமன், கிருஷ்ணராயபுரம் (கிழக்கு) சங்கப்பிள்ளை,(மேற்கு) தமிழ்செல்வன், கடவூர் (தெற்கு) முருகேசன், தோகைமலை இளங்கோ மற்றும் தான்தோன்றிமலை நகர பொறுப்பாளர் ராஜாமணி, குளித்தலை நகர பொறுப்பாளர் ரவிக்குமார்ன்னு 13 நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சியை விட்டு விலகிக்கொள்வதாக அறிவித்தோம். நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து பேசினோம்.

அமைச்சர்

வைகோ தி.மு.க கூட்டணியில் இருப்பதால், அங்க போகக்கூடாதுன்னு முடிவு பண்ணினோம். அதனால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வில் சேர முடிவு பண்ணி இருக்கோம். முதல்வரிடம் அமைச்சர் தேதி கேட்டிருக்கிறார். தேதி கிடைத்ததும் விரைவில் அ.தி.மு.க-வில் இணைவோம்" என்றார்.