`பேச்சுவார்த்தை நடத்தினால் ஏமாற்றமே மிஞ்சும்’ - மேக்கே தாட்டூ பிரச்னையில் ஒரே கருத்தை முன்வைக்கும் அரசியல் கட்சியினர் | There is no need to discussion with Karnataka on mekedatu issue

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (19/12/2018)

கடைசி தொடர்பு:08:30 (19/12/2018)

`பேச்சுவார்த்தை நடத்தினால் ஏமாற்றமே மிஞ்சும்’ - மேக்கே தாட்டூ பிரச்னையில் ஒரே கருத்தை முன்வைக்கும் அரசியல் கட்சியினர்

மேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு அணைகட்டும் விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகனும்,  உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும், ``கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர்.

துரைமுருகன்

கன்னியாகுமரியில் சட்டசபை பொது கணக்குகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தி.மு.க., பொருளாளர்  துரைமுருகன்  சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மேக்கே தாட்டூ அணை விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,  ``மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தையில்  எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பேசிப்பேசி நாங்கள் ஏமாந்திருக்கிறோம். சட்டப்படி என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். பேச்சுவார்த்தை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. காவிரி நடுவர்மன்ற விவகாரத்திலும் பேச்சுவார்த்தை நடத்திதான் ஏமாந்திருக்கிறோம்.” என்றார். 

அமைச்சர் வேலுமணி

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது அவசியம் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா அரசு மதித்ததே இல்லை. இதில் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. கர்நாடகா  அரசு உச்சநீதிமன்றத்தை மதிக்க வேண்டும். உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு மீது சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதை எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க