வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (19/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (19/12/2018)

`முடிந்துபோன சீசன்; திடீரென ஆர்ப்பரித்துக் கொட்டியது தண்ணீர்!' - ஆச்சர்யத்தில் பழைய குற்றாலம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர்  வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையிலும்கூட தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித் தீர்க்கிறது. அதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின்அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வோரும் அங்கு சென்றுவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். 

பழைய குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பெய்த பலத்த மழையினால் பழைய குற்றாலம் அருவியில் திடீர்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் அதிகரித்தவுடன், சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர். ஆனால், நேரம் செல்லச் செல்ல அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.

அருவியில் விழும் தண்ணீர், பொதுமக்கள் வழக்கமாகக் குளிக்கும் இடத்தைக் கடந்து வெகுதொலைவில் கொட்டியது. அதனால் அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்தப் பகுதிக்குச் செல்லவே பயணிகள் அஞ்சினார்கள்.

வழக்கமாக குற்றாலம் சீசன் நேரங்களிலும் பருவமழைக் காலங்களிலும் மட்டுமே குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவது வழக்கம். ஆனால், பழைய குற்றாலம் அருவியில் திடீரென ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு பயணிகளை மட்டும் அல்லாமல் உள்ளூர்வாசிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.