`நியாயங்கள் காயம் பட்டா பூமி தாங்குமா?' - விநாயகன் யானைப் பிரிவால் வாடும் கோவை இளைஞர்கள்! | Coimbatore elephant video memes goes viral in social media

வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (19/12/2018)

கடைசி தொடர்பு:12:48 (19/12/2018)

`நியாயங்கள் காயம் பட்டா பூமி தாங்குமா?' - விநாயகன் யானைப் பிரிவால் வாடும் கோவை இளைஞர்கள்!

விநாயகன் யானை இடமாற்றம் செய்யப்பட்டதற்காக, கோவை இளைஞர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்கள் வைரலாகி வருகின்றன.

விநாயகன்

கோவை வனப்பகுதியில் ராஜாவாகச் சுற்றிவந்த விநாயகன் யானை, முதுமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைதியான சுபாவம் கொண்ட விநாயகனுக்கு அங்கு மக்கள் மத்தியில் ரசிகர் கூட்டம் அதிகம். பெரிய தடாகம் பகுதியில் விநாயகனைப் பிடித்தபோது கூட ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது விநாயகனுடன் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து, ``இனி நாங்க உன்ன எப்பப் பார்ப்போம்?” என்றெல்லாம் சோகத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, மயக்க ஊசியின்போது சோர்வாக இருந்த விநாயகன் லாரியில் புறப்பட்டபோது, தனது தும்பிக்கையைத் தூக்கிக் காண்பித்து, ``சென்று வருகிறேன்” என்பது போல செய்கை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விநாயகன் தும்பிக்கை தூக்கி செய்கை காண்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அந்த வீடியோவில் சோகப் பாடல்களை இணைத்து, வீடியோ மீம் தயாரித்து வருகின்றனர் அந்தப் பகுதி இளைஞர்கள். துப்பாக்கிப் படத்தில் வரும் ``மெல்ல விடை கொடு விடை கொடு மனமே. இந்த நினைவுகள் நினைவுகள் கனமே.. தாய்மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்”. ரஜினியின் படிக்காதவன் படத்தின் ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் பாடலில் வரும் ``பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்ல திங்கும்” வரிகள், ``நல்ல மனுசனுக்கும் மிருகத்துக்கும் விளக்கம் தெரியல. தெரியாம போட்டதிங்க தப்புக் கணக்குதான். நியாயங்கள் காயம் பட்டா பூமி தாங்குமா?” போன்ற பாடல்களை, விநாயகன் வீடியோவில் இணைத்து, அந்தப் பகுதி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.