"டெபாசிட் பணத்தைக் கேட்டதால் மாணவர் தாக்கப்பட்டாரா?" என்ன நடந்தது தனியார் கல்லூரியில்..? | Madurai Private Engineering College in trouble after a former student's accusation

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (19/12/2018)

கடைசி தொடர்பு:23:25 (19/12/2018)

"டெபாசிட் பணத்தைக் கேட்டதால் மாணவர் தாக்கப்பட்டாரா?" என்ன நடந்தது தனியார் கல்லூரியில்..?

மிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்வி வியாபாரமாக்கப்பட்டுப் பல காலமாகி விட்டது. பெற்றோரைக் கடன்காரர்களாக்கி, மாணவர்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றன நிறைய தனியார் கல்வி நிறுவனங்கள்.

இந்தச் சூழலில் மதுரையில் தன்னுடைய கல்லூரி பற்றிப் புகார் தெரிவித்த கார்த்திக் என்ற மாணவன் மீது சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி நிர்வாகம் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. ``மாணவன் மீதான தாக்குதல் தொடர்பாகக் காவல்துறையிடமும், உயர் கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார்கள் தொடர்புடையவர்கள். 

பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்திக்இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவன் கார்த்திக், ``நான் 2017-ல் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் முடிச்சேன். எங்க பேட்ச்ல மட்டும் 400 பேருக்கு மேல் இருக்கோம். கல்லூரியிலிருந்து வரவேண்டிய முன்வைப்புத் தொகை ஐயாயிரம் ரூபாய், கோர்ஸ் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் வராததால் கல்லூரி நிர்வாகத்திடமும், கல்லூரியின் தலைவர் மாதவனிடமும் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டேன். ஆனால், அந்தத் தொகையை கல்லூரி நிர்வாகம் திருப்பித் தரவில்லை. ``மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அரசாங்கத்திலிருந்து நிதி வந்தபிறகுதான் திருப்பித் தரமுடியும்" என்று கல்லூரியின் தலைவர் மாதவன் கூறினார். ஆனாலும், கல்லூரித் தரப்பிலிருந்து பணத்தைத் தருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கப்புறம், ரெண்டு பேட்ச் மாணவர்கள் வெளியேறிட்டாங்க. 

எங்க பணத்தைக் கொடுப்பதில் இழுத்தடிப்பு தொடர்ந்ததால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பிரதமர் அலுவலகம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவென்று எல்லாருக்கும் புகார் அனுப்பினேன். இன்னும் சில மாணவர்களும் என்னைப்போன்றே புகார்களை அனுப்பினாங்க. இந்த நிலையில, நவம்பர் 30-ம் தேதி, இதைப் பற்றிப் பேசுறதுக்காக கல்லூரிக்கு என்னைக் கூப்பிட்டாங்க. அங்கே போனதும் மேலாளர் மாமுண்டி உட்பட 20 பேர் என்னைக் கடுமையாகத் தாக்கி, 3,500 ரூபாய் மட்டும் கொடுத்து வலுக்கட்டாயமா ரெவென்யூ ஸ்டாம்ப்ல கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க. `எங்களுக்கு சென்ட்ரல் வரைக்கும் ஆளு இருக்கு. நினைச்சா இங்கயே உன்னைத் தென்ன மரத்துக்கு உரமாக்கிட்டுப் போய்டுவோம்'னு சொல்லி மிரட்டினாங்க. இந்தத் தாக்குதல் பற்றியும், கொலை மிரட்டல் குறித்தும் அன்றைய தினமே மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தேன். `அண்ணா பல்கலைக்கழகத்துக்கிட்டதான், பண விஷயம் பற்றிக் கேட்கணும். கொலை மிரட்டல் குறித்து விசாரிக்கிறோம்'ன்னு அவரும் சொன்னார். ஆனா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலமாகத்தான், இந்தக் கல்லூரியில சேர்ந்தேன். ஆனாலும், சம்பந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறாங்க'' என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பொறியியல் கல்லூரிகளில், கவுன்சலிங் மூலமாக, மாணவர் சேர்க்கையின்போது முன்வைப்புத் தொகையாக (Caution Deposit) ஐந்தாயிரம் ரூபாயும், விடுதியில் சேரும் மாணவர்களிடம் பத்தாயிரம் ரூபாயும் பெறுவார்கள். மாணவர்கள் ஏதேனும் பொருள்களை சேதப்படுத்தினால், பயிற்சிக் காலம் முடிந்த பின் அந்த முன்வைப்பு தொகையிலிருந்து அந்தப் பணத்தைக் கழித்துக்கொண்டு எஞ்சிய தொகையைக் கொடுப்பார்கள். என்றாலும், பெரும்பாலான நிர்வாகங்கள், எந்தத் தவறும் இழைக்காத மாணவர்களின் முன்வைப்புத் தொகையைக்கூட திருப்பிக் கொடுப்பதில்லை.

தனியார் பொறியியல் கல்லூரி - மதுரை

இதுபற்றி அண்ணா பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரிடம் கேட்டோம். ``எங்களுக்குப் புகார் வந்தது உண்மைதான். ஆனால், மாணவர்களின் முன்வைப்புத் தொகையைத் திருப்பக்கொடுப்பது கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்டது. பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையது அல்ல. மாணவர் கார்த்திக் அளித்த புகாரின்பேரில், நவம்பர் 14 தேதிக்குள் பதில் மனு அனுப்புமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டிருந்தோம். ஆனால், கல்லூரி தரப்பிலிருந்து எங்களுக்கு அதுகுறித்து எந்தப் பதிலும் வரவில்லை. இருதரப்பிலும் விசாரித்து, என்ன நடந்தது என்ற கேட்டபின்னர் நடவடிக்கை எடுப்போம்" என்றார். 

இதற்கிடையே, இந்தப் பிரச்னை முடிக்கப்பட்டு விட்டதாக, அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர் கார்த்திக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதாவது கார்த்திக்கை மிரட்டி, ரூ.3,500 கொடுத்ததைத்தான் கல்லூரி நிர்வாகம், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கணக்குக் காட்டியதன் அடிப்படையில் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் கார்த்திக். எனினும், மற்ற மாணவர்களுக்கு அந்தத் தொகையைக் கூட திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கல்லூரியின் முதல்வராக இருந்த மாரிமுத்து விலகி விட்டதால், புதிய முதல்வரான சிவசுப்ரமணியனிடம் மாணவர்களின் முன்வைப்புத் தொகை தொடர்பான புகார்கள் பற்றிப் பேசினோம், ``நான் பொறுப்பேற்று ஒருவாரம்தான் ஆகிறது. இந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் கல்லூரி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்தவொரு மாணவரும் கல்லூரி பற்றிப் புகார் கூறியதில்லை. சம்பந்தப்பட்ட மாணவருக்குக் கொடுக்க வேண்டிய டெபாசிட் முன் பணத்தைக் கொடுத்தாச்சு'' என்று அதற்கான ரசீதுகளைக் காட்டினார்.

கல்லூரி மேலாளர் மாமுண்டி, ``மாணவர் கார்த்திக், வேறு யாரோடும் சேர மாட்டார். யாரைப் பத்தியாவது பெட்டிசன் எழுதிப் போடுவதே அவர் வேலை. அந்த மாணவரின் டார்ச்சர்ல ஒரு பேராசிரியர் வேலையை விட்டே போயிருக்கார்னா பார்த்துக்கங்க. இங்குள்ள கேன்டீன் ஊழியரை அவங்க அப்பா அடிச்சுட்டாரு. ஃபைனான்ஸ் பிரச்னையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்வைப்புப் பணத்தை மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பணத்தைக் கொடுத்ததும் வவுச்சர்ல கையெழுத்துப் போட்டு வாங்கிகிட்டு, அவர் அனுப்பின `புகாரை எல்லாம் வாபஸ் வாங்கிக்கிறேன்'னு எழுதிக் கொடுத்துட்டுப் போனார். எனவே, சம்பந்தப்பட்ட மாணவருக்கு மனோதத்துவ நிபுணர்கள் கவுன்சலிங் கொடுக்கணும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்