வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (19/12/2018)

கடைசி தொடர்பு:12:54 (19/12/2018)

`அவர் கை பட்டாலே நோய் பறந்துவிடும்!' - 5 ரூபாய் டாக்டர் மரணத்தால் கலங்கும் வண்ணாரப்பேட்டை

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 48 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தவர் மருத்துவர் ஜெயசந்திரன். வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயசந்திரன் என்றால் பலருக்கும் அடையாள தெரிவது கடினம்தான். ஆனால் ஐந்து ரூபாய் டாக்டர் என்றால் அனைவரும் அவரது வீட்டுக்கு வழிகாட்டுவார்கள். அந்த அளவு அந்தப் பகுதியில் பிரபலமானவர் இந்த ஐந்து ரூபாய் டாக்டர். 

டாக்டர் ஜெயசந்திரன்

டாக்டர் ஜெயசந்திரன் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள கொடைப்பட்டினத்தில் பிறந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் மிகவும் சிரமப்பட்டு தன் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அடுத்து சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி படித்துள்ளார். இதற்கிடையில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைக்க, தன் தாய் மாமா உதவியுடன் அந்தக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவரது நண்பர் கனகவேல் உதவியுடன் மீதி படிப்பையும் முடித்துள்ளார்.

டாக்டர் ஜெயசந்திரன்

பிறகு கனகவேல் குடும்பத்தார்தான், இவருக்கு முதன் முதலில் வண்ணாரப்பேட்டையில் ஒரு கிளினிக் வைக்க உதவியுள்ளனர். இவரது கிளினிக் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது அன்று முதல் தற்போது வரை தன்னிடம் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் வாங்காமல் இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார்.  நோயாளிகள் கொடுக்கும் இரண்டு ரூபாய் வாங்கிய இவர், அடுத்து ஐந்து ரூபாய் வாங்கியுள்ளார். அதுவும் தர முடியாதவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்துள்ளார். யாரேனும் அதிகமாகப் பணம் வழங்கினால் அதை ஜெயசந்திரன் வாங்க மாட்டார். சில பொதுமக்கள் மற்றும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் இவருக்கு மருந்துகள் போன்ற மற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்குவார்கள். அதைவைத்தே இத்தனை வருடங்களாக இலவச சேவை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று காலை மாரடைப்பால் ஜெயசந்திரன் உயிரிழந்தார். இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்.கே.நகர் பகுதி சி.பி.எம் கட்சியின் செயலாளரான லோகநாதனிடம் பேசினோம், `` இறந்த மருத்துவர் ஜெயசந்திரனுக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். காலையில் 6 மணி அல்லது அதற்கு முன்பு எப்போது சென்றாலும் முகம் சுழிக்காமல் மருத்துவம் பார்ப்பார். அவரது வீட்டில்தான் கிளினிக் வைத்துள்ளார். அங்குதான் மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார். இந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாது வெளி ஊர்களில் இருந்தும் பல விவசாயிகள், ஏழை எளிய மக்கள் இவரிடம் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வர். அவர் சாதாரண பொது மருத்துவர்தான். ஆனால், பெரிய வல்லுநர்களால் தீர்க்க முடியாத நோய்களையும் இவர் தீர்த்துள்ளார். அவர் கை பட்டாலே நோய் பறந்துவிடும் என்றுதான் எங்கள் மக்கள் கூறுவார்கள். 

மருத்துவக் கட்டணமாக இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் வாங்குவார். அதிகபட்சமாக இருபது ரூபாய் மட்டும்தான் வாங்குவார். அதுவும் அவர்களாக விருப்பப்பட்டு கட்டாயப்படுத்தினால் மட்டுமே வாங்கிக்கொள்வார். தன் சொந்தப் பணம் மூலம் மருந்து, மாத்திரைகளை வாங்கி அதைப் பொதுமக்களுக்கு இலவசமாகத் தருவார். மிகவும் முடியாத பட்சத்தில் வெளியில் மருந்து வாங்கச் சொல்லி எழுதிக் கொடுப்பார். இந்தப் பகுதியில் நடக்கும் அனைத்து சுப காரியங்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் வருவார். பொதுமக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன்னால் நிற்பார். இங்குள்ளவர்களைப் பொறுத்தவரை, அவர் ஒரு தலைவர் போல. தன்னிடம் வரும் நோயாளிகளை உரிமையாக அணுகி சிகிச்சையளிப்பார். இங்கு வரும் பெண்களை தன் மகள் என்றுதான் கூறுவார். குழந்தைகளை அன்பாக நடத்துவார். அவரது வீட்டில் எப்போதுமே கூட்டம் அலைமோதும். அவரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். கடந்த வாரம் வரை மிகச் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். எங்கள் பகுதி மக்கள் அனைவரும் அவரது வீட்டில்தான் தற்போது உள்ளனர். அவரின் இறப்பு எங்களுக்கு மிகப் பெரும் இழப்பு” என கூறினார்.

டாக்டர் ஜெயசந்திரன்

ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயசந்திரன் மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, அவரது  ‘நேதாஜி சமூக சேவை இயக்கம்’ மூலம் பல கிராமங்களுக்குச் சென்று கண்தானம், ரத்ததானம், கண் புரை நீக்குதல் போன்ற இரண்டாயிரத்துக்கும் அதிகமான மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். மேலும்  `மகப்பேறும் மாறாத இளமையும், 'குழந்தை நலம் உங்கள் கையில்' போன்ற சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரின் மனைவி, மகன், மகள் போன்றவர்களும் மருத்துவர்கள்.

டாக்டர் ஜெயசந்திரன்

டாக்டர் ஜெயசந்திரன் கடந்த வருடம் விகடனுக்கு அளித்த பேட்டியில், “நம்ம இளம் மருத்துவர்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான். தயவுசெஞ்சு கிராமங்களுக்குப் போங்க. நெறையா மருத்துவ முகாம்களை நடத்துங்க. ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்க. அவங்க வீட்டு உறுப்பினர்களைப்போல பழகுங்க. நம்ம ஜனங்க மருத்துவர்களைக் கடவுளாப் பார்க்குறாங்க. அவங்களைக் குழந்தைகள்போலப் பார்த்துக்க வேண்டியது, நம்ம கடமை. அதேபோல மருத்துவக் கல்லூரியிலேயே சேவைகளைப் பத்தி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். மருத்துவம் புனிதமானது. அது வியாபாரமாகிடக் கூடாது. இன்னிக்கும், என்னிக்கும் அது சேவையா மட்டும்தான் இருக்கணும்’’ என பேசியுள்ளார்.