வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (19/12/2018)

கடைசி தொடர்பு:13:43 (19/12/2018)

`கருவைக் கலைத்தால் உயிருக்கே ஆபத்து!' - குழந்தை பெற்றெடுக்கும் வரை சிறுமியைப் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறுமியின் வயிற்றில் வளரும் கரு 30 வாரத்தைத் தாண்டிவிட்டதால் கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் கருவைக் கலைக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், குழந்தை பெற்றெடுக்கும் வரை சிறுமியை பாதுகாக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை உயர் நீதிமன்றம்

குழந்தைகளை போதைப்பொருளாகப் பார்க்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் இது போன்ற குற்றங்களால் பெற்றோர்கள் அச்சத்துடனே வாழ வேண்டியிருக்கிறது. இதை உறுதிசெய்கின்றன திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள். ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும்  குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் அவர்கள் வயிற்றில் கரு உண்டாகிவிட்டது. அந்தக் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனப் பெற்றோர்கள் மனு அளித்திருந்தனர். 

சம்பவம் ஒன்று: கொடைக்கானலைச் சேர்ந்த விதவை தாயின் மகள், அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு அண்ணன் முறையுள்ள வாலிபர் ஒருவரின் முறைகேடான செயலால் கர்ப்பமாகியுள்ளார். அவரது கருவை கலைக்க உத்தரவிடக்கோரிக் கோரி, சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுமியின் வயிற்றில் 24 வாரக் கரு உள்ளது என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் கருவை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்தச் சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நான்கு வாரத்துக்குள் இந்தத் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சம்பவம் இரண்டு: திண்டுக்கல்லைச் சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறுமி, வீட்டுக்கு எதிரில் புதிதாக உருவாகும் கட்டடத்தின் வாட்ச்மேன் தாத்தாவுடன் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பது வழக்கம். இந்நிலையில் சிறுமியிடம் அந்த முதியவர் தகாத முறையில் நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனால் சிறுமி கர்ப்பம் ஆனார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோருக்கு விஷயம் தெரியவந்தது. உடனடியாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், `தங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார் சிறுமியின் தாய். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றில் உள்ள கரு, முப்பது வாரம் (ஏழரை மாதம்) கழிந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில், கருக்கலைப்பு செய்வது சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனடிப்படையில் நேற்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பி.புகழேந்தி ஆகியோர்,  `தாத்தா வயதுடைய ஒருவரால் 12 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இந்த சிறுமி குழந்தை பெறுவதால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சமுதாயத்தில் எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகளை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட முதியவரைச் சிறையில் அடைப்பதால் மட்டும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள தீராத வடுவைப் போக்கிவிட முடியாது.

பாலியல் வன்கொடுமை

அதே நேரத்தில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை அகற்றுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தோம். ஆனால், சிறுமியின் வயிற்றில் வளரும் கரு 30 வாரத்தைத் தாண்டிவிட்டதால் கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மருத்துவர்களின் கருத்தைப் புறம் தள்ளிவிட்டு கருக்கலைப்பு செய்ய உத்தரவிட முடியாது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நான்கு வாரத்தில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு சட்டத்தின் கீழ் உள்துறைச் செயலாளர் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த உத்தரவு பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறுமிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கத் தடையாக இருக்காது. பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தை பெற்றெடுக்கும் வரையிலான செலவை அரசு ஏற்க வேண்டும். குழந்தை வளர்க்க முடியாவிட்டால் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையைத் தத்துக் கொடுக்கலாம். சமூக நலத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தத்தெடுத்துக் கொள்ளலாம்'' எனத் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலை, பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகள் மீதான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க