சென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை? ஜெயலலிதா உணவு பில் பின்னணி | Price of Apollo hospital canteen idly

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (19/12/2018)

கடைசி தொடர்பு:16:29 (20/12/2018)

சென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை? ஜெயலலிதா உணவு பில் பின்னணி

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றதற்கான செலவு விவரங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு வைத்திருக்கிறது அப்போலோ நிர்வாகம்.

அப்போலோ பில்

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாள்களுக்கு ஆன மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய். இதில் உணவு செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய். ``ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்தால்கூட இவ்வளவு ரூபாய் உணவுக்கு செலவாகியிருக்காது. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட செலவாக இருக்க வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தினர் அங்கேதான் தங்கியிருந்தார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி விசிட் அடித்தார்கள். அவர்களுக்கான உணவு, தேநீர் அனைத்தும் இந்தச் செலவில் சேர்க்கப்பட்டிருக்கலாம்” எனவும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போலோவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் உணவு வழங்கினார்கள். அந்தச் செலவும் இதில் சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 1.56 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவழித்திருக்கிறார்கள்.

 கேண்டீன்

அப்போலோவின் உணவு அவ்வளவு விலை உயர்ந்ததா ஐந்து நட்சத்திர ஹோட்டலைவிட கூடுதலாக விலை இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு தொகை வந்திருக்கும். உண்மையில் அப்போலோவின் உணவு விலைப்பட்டியல் என்ன என்பதைக் கண்டறிய நேரடியாக அப்போலோவுக்கு விசிட் அடித்தோம். மெயின் பிளாக்கிலும் சிந்தூரி பிளாக்கில் தலா ஒரு ரெஸ்ட்டாரன்ட் அப்போலோவில் உள்ளது. கீழ்த் தளத்தில் இருக்கிற ரெஸ்ட்டாரன்ட்டுக்கு முதலில் போனோம். இது செல்ஃப் சர்வீஸ் ரெஸ்ட்டாரன்ட்டு. டாக்டர்கள் சாப்பிட தனிப் பகுதி உள்ளது. நோயாளிகளின் அட்டன்டர்களும் விசிட்டர்களும் டாக்டர்களும்தான் இங்கே சாப்பிட வருகிறார்கள். சாதாரண ஹோட்டல்களில் கிடைக்கும் அத்தனை உணவும் இங்கே கிடைக்கிறது. நிறைய சாப்பிட்டோம். பார்சலும் வாங்கினோம். சப்பாத்தி 53 ரூபாய். பிளைன் தோசையும் 53 ரூபாய்தான். மினரல் வாட்டர் பாட்டல் 19 ரூபாய். வெஜ் பிரியாணி 105 ரூபாய். டின்னர் தால் 105 ரூபாய். என ஒவ்வொரு உணவுக்கு ஒரு விலை. இதில் ஜி.எஸ்.டி 5 சதவிகிதம் வேறு. இங்கே விலைப்பட்டியல் போர்டு எல்லாம் இல்லை. கேஷியர் பின்னால் இருக்கும் போர்ட்டில் தயாராகிற உணவை வைத்து அவ்வப்போது உணவு பெயரை எழுதிப் போடுகிறார்கள். உணவுப் பெயருடன் விலையும் எழுதி வைக்கிறார்கள்.

மெனு

``அம்மா இட்லி சாபிட்டார்கள்'' என மூளையின் ஸ்பார்க் அடிக்க.. ``சார் இட்லி என்ன விலை?'' என்றோம். ``மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட் 44 ரூபாய்'' என்றார் கேஷியர். ஜூஸ் அயிட்டங்களும் இங்கே விற்கிறார்கள். இந்த ரெஸ்ட்டாரன்டை ஒட்டியே பெரிய கிச்சனும் இருக்கிறது. இதுதவிர இதே மெயின் பிளாக்கில் இன்னோரு இடத்திலும் ரெஸ்ட்டாரன்ட்டும் உள்ளது. இது தவிர சின்ன காபி ஷாப்பும் உண்டு. அடுத்து சிந்தூரி பிளாக்கில் உள்ள ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போனோம். அந்த ரெஸ்ட்டாரன்ட்டுக்கு பெயர் Le Bistra. கொஞ்சம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கிறது அந்த ரெஸ்ட்டாரன்ட். முற்றிலும் ஏஸி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டேபிளில் உட்கார்ந்தால் ஆர்டர் எடுக்கிறார்கள். இங்கேயும் இட்லியை ருசி பார்த்தோம். அதே மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட் 58 ரூபாய். இங்கே விலைப்பட்டியல் உண்டு. அசைவமும் கிடைக்கிறது. இங்கே உள்ள உணவுகளில் மிகக் குறைவாக உள்ள விலையுள்ள உணவு பட்டர் மில்க்தான். விலை 30 ரூபாய். அதிக விலையுள்ள உணவுப் பொருள் கிரில்டு ஃபிஸ் 330 ரூபாய்.

பில்

எல்லாம் சரி நோயாளிகளுக்கு உணவு எங்கிருந்து செல்கிறது. நோயாளிகளுக்கு தனியாக கிச்சன் இருக்கிறது. அங்கிருந்துதான் உணவு பெட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஜெயலலலிதா அப்போலோவில் பல நாள்கள் சுய நினைவு இல்லாமல் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், எத்தனை நாள்களுக்கு அவர் உணவு சாப்பிட்டிருப்பார். அப்படி சாப்பிட்ட சில நாள்களுக்கு கோடிகளில் பில் வராது. அப்போலோவில் உள்ள உணவு விலையும் மிகப் பெரிய அளவில் இல்லை. ஆனால், எப்படி கோடிகளில் கட்டணம் வந்தது என்பது அப்போலோவுக்கே வெளிச்சம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க