`ரூ.9,000 கொடு; நிலத்தை அளக்கிறேன்!' - கையும் களவுமாக சிக்கிய வாணியம்பாடி சர்வேயர் | 'Rs 9000 bribe to measure land!' - Surveyor arrested in vaniyampadi

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (19/12/2018)

கடைசி தொடர்பு:14:56 (19/12/2018)

`ரூ.9,000 கொடு; நிலத்தை அளக்கிறேன்!' - கையும் களவுமாக சிக்கிய வாணியம்பாடி சர்வேயர்

வாணியம்பாடியில் நிலத்தை அளவீடு செய்ய ரூ.9,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்.

சர்வேயர்

வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த அம்மூர் கல்புதூரைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் அசோகன் (33). இவர், வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆலங்காயம் குறுவட்டத்துக்கான சர்வேயராக (நில அளவையர்) பணியாற்றி வருகிறார். வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கோபாலகிருஷ்ணன் (31) தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி, சர்வேயர் அசோகனை அணுகினார். சர்வேயர், ‘ரூ.9,000 கொடு... அப்போதுதான் நிலத்தை அளக்க வருவேன்’ என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன், இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.9,000 பணத்தை எடுத்துக்கொண்டு வாணியம்பாடி- ஆலங்காயம் பைபாஸ் சாலையோரம் உள்ள ஒரு விடுதிக்கு கோபாலகிருஷ்ணன் இன்று சென்றார். அங்கிருந்து போன் மூலம் சர்வேயரை வரவழைத்து லஞ்சப் பணத்தை கொடுத்தார்.

சர்வேயர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். கைரேகை பதிந்த நோட்டுகளை உடனடியாக கைப்பற்றி சர்வேயரை கைது செய்தனர். அவரிடம், போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.