வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (19/12/2018)

கடைசி தொடர்பு:15:35 (19/12/2018)

திரு உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் சந்தனக் காப்பு களைதல் உற்சவம்!

ராமநாதபுரம் அருகே அமைந்துள்ள திரு உத்திரகோசமங்கையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மரகத நடராஜர் சந்தனக் காப்பு களைதல் வரும் 22-ம்தேதி நடக்க உள்ளது.

சந்தன காப்பு களையப்பட்ட நிலையில் மரகத நடராஜர்.

 

ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது திரு உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில். இங்கு வேறு எங்கும் காண முடியாத வகையிலான 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் காணப்படும் மரகத நடராஜரின் சிலை திருவாதிரை தினத்தன்று மட்டும் சந்தனக் காப்பு களையப்பட்ட நிலையில் மரகத மேனியாக தரிசனம் செய்யலாம். 

இந்த ஆண்டு சந்தனக் காப்பு களைதல் நிகழ்வு வரும் 22-ம் தேதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கும், மறு நாள் காலை 5:30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை காப்புக் கட்டுதலுடன் திருவாதிரை விழா தொடங்கியது. மரகத நடராஜர் சந்தனக் காப்பு களையும் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அன்று காலை 11:00 மணி முதல் மரகத நடராஜருக்கு 21 வகையான அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். அன்று காலை 9:30 முதல் பக்தர்கள் பச்சை மரகத நடராஜரைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது. 

 மறுநாள் காலை 4:00 மணிக்கு புதிய சந்தனக் காப்பிடுதலும், சர்வ அலங்காரமும் நடைபெறும். 5:30 மணிக்கு மகா தீபாராதனையும், அருகே உள்ள கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனமும் நடக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.