`பொன்.மாணிக்கவேல் எப்படிப்பட்டவர்?’ - டி.ஜி.பி-யிடம் அதிர்ச்சி புகார் கொடுத்த போலீஸ் டீம்  | Petition against pon manickavel

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (19/12/2018)

கடைசி தொடர்பு:15:15 (19/12/2018)

`பொன்.மாணிக்கவேல் எப்படிப்பட்டவர்?’ - டி.ஜி.பி-யிடம் அதிர்ச்சி புகார் கொடுத்த போலீஸ் டீம் 

போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல்

``பொன்.மாணிக்கவேல் தலைமையில் எங்களால் வழக்குகளை விசாரிக்க முடியாது. அதனால்தான் போலீஸ் டி.ஜி.பி-யிடம் மனு கொடுத்துள்ளோம்’’ என்று போலீஸ் டீம் பரபரப்பான தகவல்களைத் தெரிவித்தனர். 

ஓய்வு பெற்ற பிறகும் நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி இளங்கோ, டி.எஸ்.பி பழனிச்செல்வன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் டி.ஜி.பி-யைச் சந்தித்தனர். அவர்களும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் நடந்த உள்விவகாரங்களை மனுவாகக் கொடுத்துள்ளனர். 

பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்த பிறகு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு என்பதால் அந்தப் பிரிவிலிருந்து வேறு இடத்துக்கு மாறினால் போதும் என்ற மனநிலையில் சிலர் உள்ளனர். இதனால்தான் டி.ஜி.பி-யை சந்தித்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர். 

இதற்கிடையில் டி.ஜி.பி அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் மாற்றுப் பணியாகப் பணி புரியும் ஒரு கூடுதல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், 4 காவல் ஆய்வாளர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு தலைமைக் காவலர் ஆகியோர் டி.ஜி.பி-யை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்துக்கு முரணாக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்ய வற்புறுத்தியதாகவும், அவரது வற்புறுத்தலை கடைப்பிடிக்காத காவல் அதிகாரிகளைத் திட்டியும் மிரட்டியும் வருவதால் தங்களுக்கு பணி மாறுதல் வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. 

 போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல்

இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், ``சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் யாரும் பொன்.மாணிக்கவேலைப்போல பிரபலமாகவில்லை. இன்டர்நேஷனல் சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை இன்டர்போல் போலீஸ் மூலம் தமிழகத்துக்கு அழைத்து வர மூன்றாண்டுகள் முயற்சிகள் நடந்தன. சுபாஷ் கபூரை கொண்டுவருவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்புதான் பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்தார். அதன் பிறகு, நீண்ட காலமாக அந்தப் பிரிவில் பணியாற்றிவருகிறார். சுபாஷ் கபூருக்கு சிலைகளை விற்றதாக ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவரும் தமிழகத்தில் செட்டிலான தீனதயாளனை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்கெனவே சில வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தீனதயாளன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரன்வீர்ஷாவின் பங்களா, பண்ணை வீடுகளில் சோதனை நடத்தி ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அடுத்தப்படியாக, குஜராத் மியூசியத்திலிருந்து ராஜராஜ சோழனின் சிலை மீட்கப்பட்டது. இதனால்தான் பொன்.மாணிக்கவேலை அனைவரும் பாராட்டினர். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து பொன்.மாணிக்கவேல், தமிழக ரயில்வேக்கு இடமாற்றப்பட்டதும், அவரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஸ்பெஷல் அதிகாரியாக நியமித்தது நீதிமன்றம். தற்போது அவர் ஓய்வு பெற்ற பிறகும் சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது நீதிமன்றம். ஏற்கெனவே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் ஸ்தபதிகள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு பொன்.மாணிக்கவேல் டீம் நெருக்கடிகளைக் கொடுத்ததால் அவருக்கு எதிராகக் குரல்கள் கேட்கத் தொடங்கின. சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக போலீஸ்

ஆனால், அதற்கு  நீதிமன்றம் தடை பிறப்பித்தது. தற்போது சிறப்பு அதிகாரி விவகாரத்திலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உடனடியாகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவ்வாறு பொன் மாணிக்கவேலுக்கு எதிராகச் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே எதிர்ப்பு குரல் கேட்கத் தொடங்கிய நிலையில் தற்போது வெட்ட வெளிச்சமாகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி-யை சந்தித்து மனு கொடுத்துவருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள், புகார் கொடுத்துள்ள நிலையில் இன்னும் சிலர் புகார் கொடுக்கத் தயாராக உள்ளனர். தனக்கு எதிராகப் புகார்கள் வரத்தொடங்கியதால் பொன் மாணிக்கவேலும் ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அதில் தற்போதுள்ள காவல் அதிகாரிகளில் சிலரை மாற்றிவிட்டு இளமையான காவல் அதிகாரிகள், காவலர்களை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் உள்விவகாரங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இன்னும் சில விவகாரங்களை வெளியில் சொன்னால் அது, பொன் மாணிக்கவேல் மட்டுமல்லாமல் இன்னும் சில அதிகாரிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தும்'' என்றனர். 

டிஜிபி அலுவலகத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு 

புகார் கொடுக்க வந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், ``சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் 5 ஏ.டி.எஸ்.பி-க்கள், 5 டி.எஸ்.பி-க்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 27 சப்-இன்ஸ்பெக்டர்கள், 136 கான்ஸ்டபுள்கள் உள்ளனர். கடந்த 21.7.2017-ம் தேதிக்கு முன் 333 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை விசாரிக்கத்தான் இந்த டீம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக எந்த வழக்குகளிலும் எந்த சிலைகளும் குற்றவாளிகளும் கைதுசெய்யப்படவில்லை. அதோடு சுதந்திரமாக நாங்கள் செயல்பட முடியவில்லை. ஒருவித அழுத்தத்தோடுதான் பணியாற்றி வருகிறோம். சில இடங்களில்தான் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், அந்த சிலைகள் மீட்கப்படவில்லை. எந்தக் கோயில்களிலிருந்து எந்த சிலைகள் திருடப்பட்டன என்பதைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை. 

எஸ்.ஐ-க்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால், எங்களை விசாரிக்க அனுமதிக்கவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ. அந்த மாவட்டத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டார். விசாரணை அதிகாரியிடம் ஒருவர் கொடுக்கப்படுவார். அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். சில குற்றவாளிகளை ரிமாண்ட் செய்ய சொல்லும்போது அவர்களிடம் விசாரிக்ககூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில அதிகாரிகள் மெடிக்கல் விடுமுறையில் சென்றுவிட்டனர். இதுபோல பல பிரச்னைகள் உள்ளன. தற்போது சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து நாங்கள் புகார் கொடுக்க முடியுமா. இதனால்தான் நாங்கள் டி.ஜி.பி-யிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். பொன்.மாணிக்கவேலின் தலைமையில் எங்களால் விசாரிக்க முடியாது. எங்களுக்கு வழி சொல்லுங்கள்" என்றனர்.

பேட்டி அளிக்கும் போலீஸ்

அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

 எதற்காக இப்போது பொன் மாணிக்கவேல் மீது புகார் கொடுக்கிறீர்கள்? 

 ``அன்றைக்கு உள்ள சூழ்நிலை வேறு. ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. இதனால்தான் இன்று புகார் கொடுத்துள்ளோம்." 

பொன் மாணிக்கவேல் எப்படித் தடுத்தார்? 

``333 வழக்குகளைக் கண்டுபிடிக்கத்தான் இந்த டீமுக்கு உத்தரவு. அதில் யாரையும் கைது செய்யப்படவில்லை. 3 வழக்குகளில்தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் வெளிப்படையாக சொல்ல முடியாது. வழக்கு விசாரணையின்போது நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டோம். எனவே, விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்."

உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்று சொல்கிறீர்களே? 

``அதை வெளியில் சொல்ல முடியாது. நிர்ப்பந்தத்தின் பெயரில்தான் நாங்கள் செயல்பட்டோம். நாங்கள் போலீஸ் டிப்பார்ட்மென்டில் இருக்கிறோம். அனுமதி பெற்றுதான் எதையும் சொல்ல முடியும். அதற்காகத்தான் நாங்கள் டி.ஜி.பி-யிடம் மனு கொடுக்க வந்துள்ளோம். எங்களின் எதிர்ப்பை சொல்லியிருக்கிறோம்."