`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை!’ - தமிழக அரசு குற்றச்சாட்டு | They do not provide enough fund to gaja relief, TN government alleges Central in Madurai HC bench

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (19/12/2018)

கடைசி தொடர்பு:17:45 (19/12/2018)

`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை!’ - தமிழக அரசு குற்றச்சாட்டு

மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு, ரூபாய் 1277.62 கோடி பணமிருந்தும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றச்சாட்டு.

கஜா

தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கே அவர்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வத்தோடு நிவராணப் பணி செய்தனர் குறிப்பாக, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தன்னார்வ அமைப்பினர் பெரிய அளவில் உதவிசெய்துவந்தனர். மேலும் தென்னை மரங்களை பாதுகாப்பது தொடர்பாகப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்நிலையில்கஜா புயல் பாதிப்புகளை முழுமையாகச் சரிசெய்ய வேண்டும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின்  உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு, ரூபாய் 1277.62 கோடி பணமிருந்தும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தொகை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.

அதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும், அதற்காகவே விளக்கங்கள் கேட்கப்பட்டது எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விவரங்கள் போதுமானவையாக உள்ளதா எப்போது முடிவெடுக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.