வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (19/12/2018)

கடைசி தொடர்பு:17:22 (19/12/2018)

சந்தோஷமாப் போனாங்க; சடலமாகக் கிடந்தனர்!- பூம்புகார் கடற்கரையில் பறிபோன மாணவிகளின் உயிர்

Students

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மூவர், இன்று பூம்புகார் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த மாணவிகள்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பெண்களுக்கான ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் தங்கிப் பயிலும் 7 மாணவிகள், இன்று விடுமுறை என்பதால், பூம்புகார் சுற்றுலா தலத்தைக் கண்டுகளிக்கச் சென்றுள்ளனர். மதியம் 12 மணி அளவில், கடலில் இறங்கி சந்தோஷமாய்  நீராடியபோது, திடீர் ராட்சத அலையில் சிக்கினர். இதில் சேத்தியாதோப்புவைச் சேர்ந்த சிவப்பிரியா, பழையாறுவைச் சேர்ந்த மஞ்சு, விவேகா ஆகிய மூன்று மாணவிகள் கடலில் மூழ்கி இறந்தனர்.

கடலில் மூழ்கி பலியான மாணவிகள்

சிதம்பரத்தைச் சேர்ந்த அஜினாபானு, கடலூரைச் சேர்ந்த சங்கீதா, ஆகிய இருவரையும் அருகில் உள்ள மீனவர்கள் உயிருடன் காப்பாற்றினர். கடலூரைச் சேர்ந்த அன்னலட்சுமி, காட்டு மன்னார்குடியைச் சேர்ந்த வினிதா, இருவரும் கரையில் இருந்துள்ளனர். அலையில் சிக்கிய தோழிகளின் அலறலைக் கேட்டு, கரையிலிருந்த, மாணவிகள்  சத்தம் போடவே, மீனவர்கள் ஓடிவந்து, இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. இறந்துபோன மூவரின் சடலங்கள் சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. உயிர்த்  தப்பிய அஜினாபானு, சங்கீதா இருவரும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கடலோரக்  காவல் படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Students

 

அடிக்கடி நிகழும் இத்தகைய சம்பவங்களில், மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது, மூன்று மாணவிகள் பலியாகியிருப்பது, இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.