வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (19/12/2018)

கடைசி தொடர்பு:19:15 (19/12/2018)

போலீஸைத் திசைதிருப்பி, புல்லட்டில் எஸ்கேப்! - ஆந்திராவில் சிக்கிய வியாசர்பாடி கைதி

ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து புல்லட்டில் தப்பிய விசாரணைக் கைதி ஆந்திராவில் போலீஸாரிடம் சிக்கினார்.

ஆந்திராவில் பிடிபட்ட விசாரணை கைதி சந்தோஷ் குமார்

ராமநாதபுரம் மாவட்டம், சனவேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கரபாண்டியன், கடந்த 6-ம் தேதி இவர் வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. வெளியே சென்றிருந்த சங்கரபாண்டியன் வீடு திரும்பியபோது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கையில் அரிவாளுடன் அவரது வீட்டில் இருந்து தப்ப முயன்றார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், வாலிபரை சரமாரியாகத் தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாகத் தனது வீட்டில் இருந்த 13 பவுன் நகை, ரொக்கம் திருடு போனதாகப் போலீஸாரிடம் சங்கரபாண்டியன் புகார் தொடுத்தார். இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் காயமடைந்த வாலிபர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்தோஷ் குமார் (28) எனத் தெரிந்தது.

ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி சென்றபோது இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள கண்மாய் பக்கம் சென்று திரும்பிய தன்னை அடையாளம் தெரியாத கும்பல் கட்டி வைத்து கண்ணில் மிளகாய்ப்  பொடி தூவி சரமாரியாகத் தாக்கியதாக சந்தோஷ்குமார் புகார் கொடுத்தார். தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். கடந்த 8-ம் தேதி அதிகாலை சந்தோஷ்குமார் கழிப்பறை செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த புல்லட்டை அங்கிருந்து திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தோஷ் குமாருக்கு காவல் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், காவலர்கள் மூர்த்தி, முத்துராமலிங்கம், பாலமுருகன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும், தப்பியோடிய விசாரணைக் கைதி சந்தோஷ்குமாரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் வியாசர்பாடிக்குச் சென்று விசாரணை செய்ததில் சந்தோஷ் குமார் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள தடா என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பதாகத் தெரியவந்தது. போலீஸார் அங்கு வருவதை அறிந்த சந்தோஷ் குமார் ஆரணி காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றார். ஆரணி காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் கடும் சிரமத்துக்கிடையே கைதி சந்தோஷ் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரை போலீஸார் ராமநாதபுரம் அழைத்து வருகின்றனர்.