வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (19/12/2018)

கடைசி தொடர்பு:20:15 (19/12/2018)

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் வேண்டும்! - கறுப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கிராம மக்கள், அரசியல் கட்சிகள் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். அதே சமயம் ஒப்பந்தத் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, ஆலையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி எதிர்ப்பாளர்களும், ஆலையைத் திறக்க வலியுறுத்தி ஆதரவாளர்களும் மாற்றி மாற்றி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

தீர்ப்பு வெளியான நாள் முதல் தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலைப்பகுதி, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள், தூத்துக்குடியில் முக்கிய சந்திப்புப் பகுதிகள், ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் மீது சந்தேகம் உள்ளதாகவும்,  பசுமைத் தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே வெளியாகியுள்ளதாகவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம்சாட்டினர். ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி தனித் தனியாகக் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அனைத்துக்கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமும் வியாபாரிகள் சங்கங்களுடன் இணைந்து கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று வீடுதோறும் கறுப்புக்கொடி ஏற்றப்போவதாகக் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறிவித்தனர். அதன்படி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்குவீரபாண்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

கிராமப் பகுதிகளில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்ற முயன்றபோது போலீஸார் அனுமதி அளிக்காமல், கறுப்புக் கொடிகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், வீடுகளில் உள்ள பெண்களின் கறுப்புச் சேலைகளைக் கிழித்து கொடிபோலக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 21-ம் தேதி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலத்தில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். இதே போல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கட்சி அலுவலகம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க