`சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறோம்!’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை | Sivakasi fireworks labors organised rally to re-open the factories

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (19/12/2018)

கடைசி தொடர்பு:20:45 (19/12/2018)

`சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறோம்!’ - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளைத் திறக்கக்கோரி 5 கிராமங்களைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.

பட்டாசுத் தொழிலாளர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ளனர். ஆனால், பட்டாசு உற்பத்திக்குக் கடும் கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், பசுமைப் பட்டாசு என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

எனவே, பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் 21-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவகாசி பகுதியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், காந்திநகர், சிலோன் காலனி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஊர்வலம் நடத்தினர்.

பட்டாசுத் தொழிலாளர்கள் ஊர்வலம்

சிலோன் காலனியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற கிராம பொதுமக்கள் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து சிலோன்காலனியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் கூறும்போது, ``ஆனையூர் உள்ளிட்ட 5 கிராம மக்களும் பட்டாசுத் தொழிலையே முழுவதும் நம்பியுள்ளோம். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

பட்டாசுத் தொழிலாளர்கள்

எனவே, வேலைவாய்ப்பின்றி லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுத்த சிவகாசியிலிருந்து வெளியூர் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் உள்ளோம். எனவே, உடனடியாகப் பட்டாசு ஆலைகளைத் திறந்து பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் வேதனையுடன்.