தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 6வது கட்ட விசாரணையை நிறைவு செய்த விசாரணை ஆணையம் | Thoothukudi gunfire inquiry commission finishes 6th phase inquiry

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (19/12/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 6வது கட்ட விசாரணையை நிறைவு செய்த விசாரணை ஆணையம்

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் இன்று 6-வது கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. 

நீதிபதி அருணா ஜெகதீசனுடன் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

துாத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தை  அடக்க போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்திட தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர்  விசாரணை ஆணையத்தை நியமித்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

இந்த ஒருநபர் ஆணையம், கடந்த ஜூன் 4-ம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற பகுதிகளை ஆய்வு செய்து தனது விசாரணையைத் தொடங்கியது. பின்னர், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்டவர்கள், பொதுமக்கள் எனப் பலரிடம் பிரமாணப் பத்திரங்கள் பெற்றது. அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள, ஆணையத்தின் முகாம் அலுவலகத்தில் விசாரணையை நடத்தி வந்தது. 

விசாரணை ஆணையம்

இதுவரை, 5 கட்டமாகக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 78 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்து. இந்நிலையில் 6வது கட்ட விசாரணை கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இந்த முறை 33 பேருக்கு சம்மன் அனுப்பட்டு இருந்தது. இதில், முதல் நாளில் 5 பேரும், இரண்டாவது நாளில் 6 பேரும், மூன்றாவது நாளான இன்று 10 பேர் என மொத்தம் 21 பேர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை

சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து போலீஸாரின் தடியடியில் சிறையில் உயிரிழந்த பாரத்ராஜா என்பவரின் உறவினர்கள், அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த, நெல்லை மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 6வது கட்ட விசாரணையில் கலந்துகொண்டனர். அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 22-ம் தேதி தொடங்குவதாக ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க