``மொசாட் தெரியுமா?" - கோவை போலீஸாரை அதிர வைத்த போலி உளவுத்துறை அதிகாரி! | Fake intelligence officer arrested in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:09 (20/12/2018)

``மொசாட் தெரியுமா?" - கோவை போலீஸாரை அதிர வைத்த போலி உளவுத்துறை அதிகாரி!

கோவையில், உளவுத்துறை அதிகாரி என்று போலியாக தயாரித்த ஐ.டி கார்டு மற்றும் ஏர் கன்னுடன் சுற்றித் திரிந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

போலி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் ஐயர் (48). இவர் கடந்த சில வருடங்களாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே, இவர் அந்தப் பகுதிகளில், தன்னை உளவுத்துறை அதிகாரி என்று பொதுமக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே ஏர் கன் துப்பாக்கியுடன் ஒரு நபர் சுற்றி வருவதாகப் பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தொண்டாமுத்தூர் போலீஸார் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த விஜயராமன் ஐயரைக் கைது செய்தனர். விசாரணையில் விஜயராமன், தான் மத்திய உளவுப்பிரிவு 'ரா' அமைப்பில் பணி செய்து வருகிறேன். மேலும், இஸ்ரேல் நாட்டின் மொசாட் பிரிவில் செயல்பட்டு வருவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, சந்தேகம் அடைந்த போலீஸார் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். 

போலி

மேலும், அவரை வடவள்ளி காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் போலியான உளவுத்துறை ஐ.டி கார்டை தயாரித்து வைத்துக்கொண்டு, ஏர் கன்களுடன் சுற்றி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, விஜயராமன்  வைத்திருந்த போலியான ஆவணங்கள் மற்றும் ஏர் கன்னை போலீஸார் பறிமுதல் செய்தனர்.