`கலவரத்தை தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகம்’- தூத்துக்குடியில் 3 பேர் கைது! | sterlite issue 3 arrested in tuticorin

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:31 (20/12/2018)

`கலவரத்தை தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகம்’- தூத்துக்குடியில் 3 பேர் கைது!

தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்தாக 3 பேரை போலீஸார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தூத்துக்குடி

 

தூத்துக்குடியில் தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டுள்ளது  தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக  அறிவித்துள்ளது. இந்த நிலையில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை நடத்திட முனைப்புடன் உள்ளன. நேற்று முன் தினம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் ஆலை மூடப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சிறப்புச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்ற முயன்றபோது போலீஸார் கொடிகளை பறிமுதல் செய்தனர். இருப்பினும், பெண்கள் வீடுகளில் உள்ள கறுப்பு நிற சேலைகளை கிழித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து தற்போது வரை தூத்துக்குடியில் போலீஸார் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை

இதுதவிர போராட்டக்காரர்கள், பல அமைப்பினர்கள், அனைத்துக் கட்சியினர்களுடன் பேச்சுவார்த்தை என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், மாவட்டத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஶ்ரீவைகுண்டம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் போராட்ட உணர்வை தூண்டும் வகையில் சிலர்  துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்துள்ளனர். இது குறித்து  தகவல் அறிந்த போலீஸார்,  அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கடலூர் மாவட்டம் மூர்த்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன், கோவில்பட்டியைச் சேர்ந்த சந்தனக்குமார், திருநெல்வேலி மாவட்டம் காந்திநகரைச்  சேர்ந்த கலில்ரகுமான் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனவும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களையும் கூறி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த  ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க