போலி மதுபானம் விற்பதில் போட்டி - காஞ்சிபுரத்தில் சாராய வியாபாரிக்கு அரிவாள் வெட்டு | attempt murder near kanchipuram collector office

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:53 (20/12/2018)

போலி மதுபானம் விற்பதில் போட்டி - காஞ்சிபுரத்தில் சாராய வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

போலி மதுபானம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ராஜா என்ற சாராய வியாபாரி அரிவாளால் வெட்டப்பட்டார். இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

கொலை

காஞ்சிபுரத்தில் கள்ளச் சாராய வியாபாரத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் கோலோச்சி வந்தவர் ஸ்ரீதர். இவர் மறைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இவரது ஆதரவாளர்களிடையே கள்ளச் சாராயம், பாண்டிச்சேரி மதுவகைகள் விற்பனை செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களைச் செய்வதற்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. ஸ்ரீதரின் ஆதரவாளரான ராஜா மற்றும் ஸ்ரீதரின் தம்பி செந்திலும் பாண்டிச்சேரி மதுபான வகைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விற்கின்றனர். இதனால் இரண்டு தரப்பினரிடையே சில மாதங்களாகவே புகைச்சல் இருந்து வருகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரைத் தொழில் போட்டி காரணமாக கொலை செய்ய ஸ்ரீதர் மைத்துனர் முருகனின் ஆட்கள் முயன்று வந்தனர். அதே வேளையில் ரியல் எஸ்டேட் செய்வதில் ராகுல் என்ற கல்லூரி மாணவருக்கும் ராஜாவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நான்கு பேர் கொண்ட கும்பல் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜாவைப் பொதுமக்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ராஜா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க