வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:08:59 (20/12/2018)

தாமதமாக வந்த அமைச்சர் - உட்கட்சிப் பூசலால் விமான நிலையத்தில் அ.தி.மு.க-வினர் மோதல்

விஜயபாஸ்கர் மீதான சர்ச்சைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணையில் அவரின் உதவியாளர் சரவணன் கொடுத்த வாக்குமூலம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் வழங்கியுள்ள சம்மன், உள்ளிட்ட விவகாரங்களால் விஜயபாஸ்கர் தலை மீண்டும் உருள ஆரம்பித்துள்ளது.

ஆதரவாளர்கள்

அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று முன் தினம் ஆஜராக ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.  குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவதாலும், சொந்த வேலை காரணமாக , ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இப்படியான சூழலில், விஜயபாஸ்கர், சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு காரில் செல்வது வழக்கம். எப்போதெல்லாம் சர்ச்சைகள் பரபரக்கிறதோ, அப்போதெல்லாம் சொந்த ஊர் வரும் விஜயபாஸ்கருக்கு, அவரது ஆதரவாளர்கள், பிரமாண்டமாக வரவேற்பது அளிப்பது வழக்கம். அந்தவகையில் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்க புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அமைச்சரின் வருகை காலதாமதம் ஆனதால் அவர்கள், திருச்சி விமான நிலைய வளாகத்தில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், திடீரென்று அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் குருபாபு என்ற ராஜமன்னாரும், மகளிரணி இணைச் செயலாளர் கலைச்செல்வியின் கணவரும் இலுப்பூர் ஒன்றிய பொருளாளராக உள்ள நல்லூர் கருப்பையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியதால், இருதரப்பும் ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ராஜமன்னாரின் வேஷ்டி உருவப்பட்டதால், அவர் சட்டையுடன் நின்றார். பின்னர் வேட்டியைத் தேடி எடுத்து அவர் அணிந்துகொண்டார்.

வேட்டியை உருவப்பட்ட ராஜமன்னார், கருப்பையாவை விடமாட்டேன், நான் யாரென்று காட்டுகிறேன் எனச் சத்தம் போட்டார்.   இந்த நிலையில், ராஜமன்னார் கட்சி நிர்வாகி ஒருவரிடம் செல்போனில் கருப்பையா குறித்துக் குறைகூறி பேசியதாகவும், அந்தக் குரல்பதிவை அந்த நிர்வாகி கருப்பையாவுக்கு அனுப்பியதால், கடுப்பான கருப்பையா, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த இலுப்பூர் ராஜமன்னாரிடம் நியாயம் கேட்கவே இருவருக்கும் கை கலப்பாகி அடிதடி வரை போய் குருராஜமன்னாரின் வேட்டியை உருவி அரை மணி நேரம் கதறவிட்டதாக கூறுகிறார்கள்.

மேலும், ராஜமன்னார் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி பல இடங்களில் திருட்டு மணல் எடுத்து வருகிறார் என்றும், தி.மு.க-விலும் உறவு வைத்திருப்பதாகவும், கருப்பையா தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. சண்டையைப் பார்த்து பதறிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பன்னீர் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததால் நிலைமை சீரடைந்தது. விமான நிலைய வாசலில், அ.தி.மு.க-வினர் மோதிக்கொண்டது கட்சியினரிடையே சலசலப்பை உண்டாக்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க