அரசு தரிசு நிலத்தில் பலகோடி முறைகேடு!- தனி நபருக்குப் பட்டா கொடுத்த வருவாய்த்துறை | Scam : Allocating Government Land to individual who has political background

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (20/12/2018)

கடைசி தொடர்பு:13:08 (20/12/2018)

அரசு தரிசு நிலத்தில் பலகோடி முறைகேடு!- தனி நபருக்குப் பட்டா கொடுத்த வருவாய்த்துறை

மாமல்லபுரம் பகுதியில் பலகோடி மதிப்பிலான அரசு தரிசு நிலத்தைத் தனிநபர் பெயருக்கு முறைகேடாக வருவாய்த்துறையினர் பட்டா மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள்.

மாமல்லபுரம் அரசு தரிசு நிலம் முறைகேடு

மாமல்லபுரம் அருகே உள்ளது கடம்பாடி கிராமம். இப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையோரத்தில் 12 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. சென்னை தாதாக்களும், லோக்கல் புள்ளிகளும் பலமுறை அந்த நிலத்தைக் கைப்பற்ற முயன்றிருக்கிறார்கள். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல வருடங்களாகப் போராடி நிலத்தைக் காத்துவருகிறார்கள். நிலம் இல்லாத உள்ளூர் மக்களுக்கு, அந்த நிலத்தை வழங்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனிநபர் ஒருவருக்கு சர்வே எண் 268-ல், 0-96.72 ஹெக்டேர் ( 2.31 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலத்தைப் பட்டா போடுவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ரகசியமாக முயன்றனர். அதற்காகப் போலியான ஆவணங்களைத் தயாரித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த நிலத்தின் தற்போதைய மார்கெட் மதிப்பு 15 கோடி. இந்த தகவல் லோக்கல் புள்ளிகள் சிலருக்குத் தெரியவர அந்த அதிகாரிகளுக்கு போன் போட்டு விவரங்களைக் கேட்டனர். அதிகாரிகளும் `அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது’ என மழுப்பலாகப் பதில் சொல்லி நழுவிக் கொண்டார்கள்.

பட்டா

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு முனுசாமி என்பவர் பெயரில் அந்த நிலத்துக்குப் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ``இது எந்த விதத்தில் நியாயம். கடந்த வாரம் வரைக்கும் பசிலியில் தரிசு நிலமாக இருந்து வந்தது. இதில் பட்டா கொடுக்கப்பட்டவரின் பெயரும் முனுசாமி, அவர் தந்தை பெயரும் முனுசாமி எனப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்பகுதியில் மீதம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தைக் கைப்பற்ற அங்கிருக்கும் சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். கடும்பாடியில் அரசாங்கத் திட்டம் செயல்படுத்துவதற்கான ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் போகும் நிலை உருவாகி இருக்கிறது. எடப்பாடி அரசில் எதுவும் நிகழலாம் என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?” எனக் கொதிக்கிறார்.

இது குறித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்துவடிவேலுவிடம் பேசினோம், ``இது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கிறேன்“ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க