வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (20/12/2018)

கடைசி தொடர்பு:15:05 (20/12/2018)

டி.ஜி.பி. பணிநீட்டிப்பு விவகாரம்! - தலைமைச் செயலர், சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்ட விரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில், தமிழக தலைமைச் செயலர், டி.கே.ராஜேந்திரன், சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுவந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் எனப் புகார் எழுந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில், கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், `` டி.கே.ராஜேந்திரன் குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து பணி நீட்டிப்பு பெற்றுள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையிலிருந்து முக்கிய ஆதாரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை டி.ஜி.பி-யின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. 

எனவே, டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு நியமனத்தை சட்டவிரோதம் என அறிவித்து உத்தரவிட வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ-யின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், 2013 தமிழ்நாடு காவலர் சட்ட விதிப்படி புதிதாக டி.ஜி.பியை நியமிக்க உத்தரவிட வேண்டும் என தனது பொது நல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலர், டி.ஜி.பி, வருமான வரித்துறை தலைமை ஆணையர், சி.பி.ஐ இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், டிகே.ராஜேந்திரன், சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.