``அவர் நேர்மையானவரா?’’ - பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகச் சீறும் அமைச்சர் சி.வி.சண்முகம் | cv shanmugam criticize pon manickavel

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (20/12/2018)

கடைசி தொடர்பு:17:15 (20/12/2018)

``அவர் நேர்மையானவரா?’’ - பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகச் சீறும் அமைச்சர் சி.வி.சண்முகம்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இவரது தலைமையின் கீழ் செயல்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகளை மீட்டெடுத்து வந்தது. இதற்காகப் பொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுவந்தார். இந்தநிலையில்தான், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

பொன். மாணிக்கவேல்

இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. அதில், சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஒரு வருடத்துக்குச் செயல்படுவார் என்றும் அவருக்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும்  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் என 24 பேர் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போதும் பெரும் சர்ச்சையாகி வருகிறது. 

சி.வி சண்முகம்

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என யார் சொன்னது. அரசு அதிகாரியாக இருக்கும் ஒருவர் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது. இன்று பொன்.மாணிக்கவேலுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் மனித உரிமையை மீறி தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும் பணிசெய்யவிடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

உயர் அதிகாரி என்பவருக்கு அந்த வழக்கை மேற்பார்வையிடுவதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த வழக்கை இப்படி விசாரியுங்கள், இவரைக் கைது செய்யுங்கள் எனச் சொல்லும் அதிகாரம் டி.ஜி.பி-க்குகூட இல்லை. தற்போது பொன்.மாணிக்கவேல் மீது மிகப் பெரிய கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நேர்மையான அதிகாரி என்றால் அவர் மீது ஏன் குற்றம்சுமத்துகின்றனர். மாறாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் துணையோடு தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல் உள்ளார் பொன்.மாணிக்கவேல்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.