``டி.டி.வி.தினகரன் நம்மை கைவிடமாட்டார்!’’ - அ.ம.மு.க நிர்வாகிகளை சமாதானம் செய்த முன்னாள் அமைச்சர் | Former TN minister compromises AMMK cadres

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/12/2018)

கடைசி தொடர்பு:17:45 (20/12/2018)

``டி.டி.வி.தினகரன் நம்மை கைவிடமாட்டார்!’’ - அ.ம.மு.க நிர்வாகிகளை சமாதானம் செய்த முன்னாள் அமைச்சர்

அ.ம.மு.க கரூர் சட்டமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பழனியப்பன்

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தி.மு.க-வுக்குப் போனாலும் போனார், கரூர் மாவட்ட அரசியல் பரபரத்துக் கிடக்கிறது. செந்தில்பாலாஜி வரும் 27-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தி ஒரு லட்சம் பேர்களை தி.மு.க-வில் இணைக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கூட்டம்போட்டு, `அ.ம.மு.க-வினர் யாரும் செந்தில்பாலாஜியோடு போக வேண்டாம்' என்று கடிவாளம் போட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.


 செந்தில்பாலாஜி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும்  கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த உயர்நீதிமன்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் சிக்கி,எம்.எல்.ஏ பதவியை இழந்தார். மேல்முறையீடு செய்யாதது,அ.தி.மு.க,அ.ம.மு.க இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது என்று எழுந்த தகவல் உள்ளிட்ட பிணக்குகளால் சமீபத்தில் சென்னையில் 2,000 ஆதரவாளர்களோடு தி.மு.க-வில் இணைந்தார். அதோடு, `வரும் 27-ம் தேதி கரூரில் ஸ்டாலின் தலைமையில் ஒட்டுமொத்த அ.ம.மு.க கூடாரத்தையும் தி.மு.க-வில் இணைப்பேன்' என்று சபதம் போட்டு செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், 'இன்னும் ஒரு வாரத்தில் அ.ம.மு.க கூடாரம் கரூரில் காலியாகும்' என்றபடி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.ம.மு.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்து வருகிறார். இந்நிலையில், பதறிப்போன டி.டி.வி.தினகரன் கட்சியின் அமைப்புச் செயலாளர் பழனியப்பன், மாநிலப் பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்ட புள்ளிகளை கரூருக்கு அனுப்பி, கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர்களுக்கு கடிவாளம் போட வைத்திருக்கிறார். 


 அ.ம.மு.க கரூர் சட்டமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பழனியப்பன்..

பழனியப்பனை கட்சியின் கரூர் மாவட்ட தற்காலிக மாவட்ட பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பழனியப்பன் தலைமையில் அ.ம.மு.க சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அ.ம.மு.க கரூர் சட்டமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தொண்டர்கள்
 

அங்கே பேசிய பழனியப்பன், "நம்மை இந்த அளவு வளர்த்தது அம்மாதான். ஆனால், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே அனுப்பி, இறக்கவும் வைத்த தி.மு.க-வுக்கு அம்மாவுக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டு செந்தில்பாலாஜி போயிருக்கிறார். தயவுசெய்து நீங்கள் யாரும் அவரோடு போக வேண்டாம். டி.டி.வி.தினகரன் நம்மை கைவிடமாட்டார். அவருக்கு எதிர்காலம் இருக்கு. நமக்கும் இருக்கு" என்று பேசினார். ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டம் முடிந்ததும், நிர்வாகிகளை மட்டும் அழைத்து, தனிரூமில் ஒவ்வொரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், ``அ.தி.மு,க-வில் அ.ம.மு.க ஒருபோதும் இணையாது. ஒரு குறிப்பிட்ட 10 பேரைத் தவிர, யார் வேண்டுமானாலும் டி.டி.வி.தினகரனை தலைவராக ஏற்று இணையலாம். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிலும் அ.ம.மு.க போட்டியிட்டு வெற்றிபெறும்" என்றார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், "தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'அ.ம.மு.க கரூர் நிர்வாகிகள் கூடாரம் காலியாகி விட்டதாகப் பேசினாரே?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ``அ.தி.மு.க-தான் காலி கூடாரம். அ.ம.மு.க கொள்கை கொண்டவர்களைக் கொண்ட பெரும் கூடாரம். செந்தில்பாலாஜியைத் தவிர, தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் யாரும் மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லப்போவதில்லை. எங்களோடுதான் இருக்கிறார்கள். பெங்களூரில் மேலும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்" என்றார்.