`சாமி குத்தம், ஆடு செத்திடுச்சு' - குறி சொன்ன பெண்ணின் மகளைக் கொடூரமாகக் கொன்ற வாலிபர் | Woman killed brutally in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:35 (20/12/2018)

`சாமி குத்தம், ஆடு செத்திடுச்சு' - குறி சொன்ன பெண்ணின் மகளைக் கொடூரமாகக் கொன்ற வாலிபர்

வேலூர் அருகே இன்று காலை இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

வேலூர் அடுத்த ஊசூர் புலிமேடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னபையன், விவசாயி. இவரின் மனைவி கஸ்தூரி, குறி சொல்பவர். இவர்களின் மகள் சுகன்யா (24), திருமணமாகாதவர். அப்பகுதி மக்கள், ‘கோயில் கட்டுவதற்காகக் குறி சொல்லி இடத்தைக் காட்டுமாறு’ இரண்டு மாதங்களுக்கு முன்பு கஸ்தூரியைக் கேட்டனர். அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருடைய வீட்டின் அருகில் இருக்கும் பொது இடத்தில் கோயில் கட்டுமாறு கஸ்தூரி குறி சொன்னார். இந்த இடத்தை அருகில் வசிக்கும் கணேசன் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், நிலத்தை உரிமை கொண்டாடிய அவர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், குறி சொன்ன கஸ்தூரியிடம் தகராறு செய்தார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பகை ஏற்பட்டது. கோயில் கட்ட குறி சொன்ன இடத்தில் கணேசனின் ஆடு சமீபத்தில் திடீரென உயிரிழந்தது. அப்போது அங்கு வந்த கஸ்தூரியின் மகள் சுகன்யா, ‘‘இது சாமி குத்தம்... கோயில் கட்ட இடம் தராததால் ஆடு செத்துவிட்டது’ என்று கூறி கணேசன் குடும்பத்தாரை ஏளனமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. தொடர் பிரச்னையால், கணேசன் குடும்பத்தார், கஸ்தூரி குடும்பம் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இளம்பெண் சுகன்யா இன்று காலை தனது நிலத்துக்கு வரப்பு வழியாகச் சென்றார். சிறிது நேரத்தில் அங்குள்ள பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான கழிவறையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கதறி அழுதனர். தகவலறிந்ததும், அரியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டுப் பார்வையிட்டனர். விசாரணையில் குறி சொன்ன தகராறில் ஏற்பட்ட பகை காரணமாகக் கணேசனின் மகன் விஜய் (19), இளம்பெண் சுகன்யாவை கொடூரமாகக் கொன்றது தெரியவந்தது. விஜய்யைப் பிடித்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.