`தொடர்ந்து நஷ்டம்; வாழ்ந்துதான் என்ன பயன்!’‍ - ஆதங்கத்தில் அரியலூர் விவசாயிகள் | Maize farmers ignored by officials at ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/12/2018)

கடைசி தொடர்பு:19:10 (20/12/2018)

`தொடர்ந்து நஷ்டம்; வாழ்ந்துதான் என்ன பயன்!’‍ - ஆதங்கத்தில் அரியலூர் விவசாயிகள்

படைப்புழு தாக்கத்தால் 25,000 ஏக்கருக்கும் மேல் மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ள நிலையில் தரமற்ற மக்காச்சோள விதைகளை விற்பனை செய்த விதை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  3 மாவட்ட விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டச் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                        

அரியலூர் மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கருக்கும் மேல்  மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு அரியலூர் மாவட்டம் கல்லகம் கேட் அருகில் அரியலூர் , திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

                                                   

 

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி தங்க சண்முக சுந்தரத்திடம் பேசினோம்...” எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 25,000 ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நான் மூன்று ஏக்கர் பயிர் செய்துள்ளேன். கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் கொடுத்தால் இவ்வருடமும் இதே மக்காசோளத்தைப் பயிரிட்டேன். ஆனால், இவ்வருடம் படைப்புழுவின் தாக்கம் இருக்குமென்று கொஞ்சம்கூட நினைக்கவில்லை. எங்கள் மாவட்டத்தில் பெருமளவு பாதிப்புள்ளது. இதனால் பயிர் வளர்ச்சிக்காக முதலீடு செய்த 1.2 லட்சம் ரூபாயைக் கூட  வருவாயாக ஈட்ட  முடியாது போல.

                                                  

 

எப்போதும் பயன்படுத்துவதைவிட இந்தமுறை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தினோம். அத்தோடு அதிக வீரியமுள்ள மருந்துகளை உபயோகித்தும் பயனில்லை. பயிரின் மேல் பரப்பில் இருந்த தாய் அந்துப்பூச்சி இறந்தபோதிலும், புழுக்களும் முட்டைகளும் சாகவில்லை. இதை அதிகாரிகளிடம் சொன்னால் நீங்கள் சரிவர மருந்துகளை அடித்திருக்க மாட்டீர்கள் என்று குறை சொல்கிறார்கள். அதே போல் பயிர் காப்பீட்டுத் தொகையும் எங்களுக்குச் சரிவர கிடைப்பதில்லை.

                                                  


அதே போல் கடந்த ஆண்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் `மோனோ குரோட்டாபாஸ்’ மருந்தால் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோனார்கள். இந்த முறை படைப்புழு தாக்கத்தால் நஷ்டம். தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகள் வாழ்ந்து என்ன பயன் எங்களுடைய ஆதங்கத்தை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக  தூக்குமாட்டிக்கொள்ளும் நூதன போரட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். தரமற்ற விதைகளை விற்பனை செய்த விதை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போரட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.