வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (20/12/2018)

கடைசி தொடர்பு:20:04 (20/12/2018)

`அந்தக் கலாசாரத்தைக் கொண்டு வந்ததே நீங்கதான்; இப்போ கடிதம் எழுதுகிறார்!' - ஸ்டாலினை சாடும் தமிழிசை

‘மோடியின் பலம்... ராகுலின் பலவீனம். பிரதமராக ராகுலை முன் நிறுத்தினால் கிடைக்கும் கொஞ்ச வாக்குகளும் கிடைக்காது’ என்று கூறியதோடு ஸ்டாலினையும் விளாசியிருக்கிறார் தமிழிசை.

தமிழிசை

வேலூரில், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன் மொழிந்ததை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு உட்பட அவர்களது கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள்கூட ஏற்கவில்லை. எல்லோரிடம் இருந்தும் எதிர்ப்புதான் வந்திருக்கிறது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ‘தமிழகத்துக்கு மோடி ஒன்றுமே செய்யவில்லை’ என்றார் ஸ்டாலின். அவர் பேசி முடிப்பதற்குள், தமிழகத்துக்கு ரூ.1,300 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாமர மக்களிடம் மோடியின் திட்டங்கள் சென்று சேர்க்கிறது. தமிழக பா.ஜ.க தெளிவாகச் சொல்கிறோம். மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம். மோடியின் பலம்... ராகுலின் பலகீனம். பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தினால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கொஞ்ச வாக்குகளும் கிடைக்காது. மோடியைத் தூங்க விடமாட்டேன் என்று சொல்கிறார் ராகுல். மக்களுக்காகத் தூங்காமல் இருக்கிறார் மோடி. இவர்கள்தான் கும்ப கர்ண தூக்கத்தில் இருக்கிறார்கள்.

20 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். இந்து இயக்கத் தலைவர்களுக்குப் பாதுகாப்பில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீண்டும் போராட்டத்தை நடத்த தி.மு.க முயற்சி செய்துகொண்டிருக்கிறது. திருமாவளவன் கட்சியைச் சார்ந்த ஒருவர், மற்ற சமூக பெண்கள் குறித்து தவறான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். உடனே திருமாவளவன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். அவர்கள் சொன்னால் மட்டும் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறீர்கள். பா.ஜ.க-வில் கருத்து மாறுபாடு இருந்தால் ஏற்றுக்கொள்வதில்லை.

தமிழக அரசியலில் மோசமான அத்தனை கலாசாரத்துக்கும் அடித்தளமிட்டது தி.மு.க-தான். இப்போது பேனர் வைக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். பேனர் கலாசாரத்தைக் கொண்டு வந்ததே தி.மு.க-தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக எங்கள் கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகிறோம். தி.மு.க, காங்கிரஸோடு சேராத எங்களோடு ஒத்துப்போகிற கட்சியோடு கூட்டணி வைப்போம்’’ என்றார்.