அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் நீட் தேர்வு சிறப்புப் பயிற்சி! - பள்ளிக்கல்வித்துறை | TN school education department plans to hold special neet training program in half yearly exam holidays

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:20:11 (20/12/2018)

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் நீட் தேர்வு சிறப்புப் பயிற்சி! - பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் ப்ளஸ் டூ பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.  

நீட் தேர்வு பயிற்சி

தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் `தொடுவானம்’ என்ற பெயரில் நீட் தேர்வு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 413 மையங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மூலமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

நீட்


இந்தநிலையில், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. ப்ளஸ் டூ மாணவர்களுக்கு வரும் 21-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, 22-ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு சிறப்பு வகுப்புகள் டிசம்பர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே நடைபெற்று வரும் நீட் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களை இந்தச் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பான சுற்றறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட இருக்கிறது.